அன்புமணி செய்வது வேதனையாக உள்ளது.. பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு
Ramadoss: அன்புமணி தரப்புக்கு சின்னமும் கிடையாது, கட்சியும் கிடையாது என கூறி, இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அன்புமணி தற்போது பாமக உறுப்பினரே அல்ல என்றும், அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் கூறினார். கட்சியை கைப்பற்ற பம்மாத்து வேலைகளை அன்புமணி தொடர்ந்து செய்து வருவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
விழுப்புரம், டிசம்பர் 17, 2025: அன்புமணி, என் பெயரையும், என் பணத்தையும், கட்சிக் கொடியையும் பயன்படுத்தி செயல்பட்டு வருவது வேதனை அளிப்பதாக பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமகவில் உட்கட்சி விவகாரம் சீராக இல்லாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. பாமகவைப் பொறுத்தவரையில், தந்தை மற்றும் மகன் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. அதாவது, ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. ராமதாஸ் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகமாக தைலாபுரம் செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில், அன்புமணி தரப்பில் கட்சித் தலைமை அலுவலகமாக பனையூர் செயல்பட்டு வருகிறது.
இருவருமே கட்சியின் நடவடிக்கைகளை தனித்தனியாக மேற்கொண்டு வருகின்றனர். பல மாதங்களாக இந்த உட்கட்சி விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து விடுவார்கள் என்ற யூகங்கள் வெளியானாலும், தற்போது வரை இருவருமே தனித்தனியாகவே செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சொத்து பத்திரத்தில் டிஜிட்டல் கையெழுத்து.. மோசடிகளை தடுக்க வருகிறது புதிய மாற்றம்!!
அன்புமணிக்கு சாதகமாக இருக்கும் தேர்தல் ஆணையம்:
இந்தச் சூழலில், தேர்தல் ஆணையம் தொடர்பான விவகாரம் அன்புமணி தரப்பிற்கு சாதகமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பனையூரில் அமைந்துள்ள அலுவலகமே பாமகவின் தலைமை அலுவலகம் என்றும், அன்புமணியே பாமகவின் தலைவர் என்றும், மாம்பழ சின்னம் அன்புமணி தரப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு தந்தை–மகன் இடையே நிலவும் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாமக தொண்டர்களும் இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
அண்மையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாத தமிழக அரசை கண்டித்து அன்புமணி தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு திமுகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் நேரில் சென்று அழைப்பு வழங்கப்பட்டது.
அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்:
இந்தச் சூழலில், பாமகவின் நிர்வாகக் குழு கூட்டம் விழுப்புரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகவும், அதன்பிறகு தனது பெயரையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தக் கூடாது என ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் கூறினார். இருப்பினும், அவர் தொடர்ந்து இரண்டையும் பயன்படுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
அன்புமணியின் செயல் வேதனை அளிக்கிறது:
மேலும், அன்புமணி தரப்புக்கு சின்னமும் கிடையாது, கட்சியும் கிடையாது என கூறி, இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அன்புமணி தற்போது பாமக உறுப்பினரே அல்ல என்றும், அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் கூறினார். கட்சியை கைப்பற்ற பம்மாத்து வேலைகளை அன்புமணி தொடர்ந்து செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
தீட்டிய மரத்திலேயே கூர்பாச்சியதைப் போல, பாமக என்னும் மரத்தில் கொலை வெட்ட ஆரம்பித்திருக்கிறார் அன்புமணி என்றும், தேர்தல் ஆணையம், டெல்லி உள்ளிட்ட அனைத்தையும் சொல்லியும் மூடக் கூட்டங்கள் நடத்தி, இதுபோன்ற பம்மாத்து வேலைகளை செய்து வருவது தமிழக அரசியலில் இதுவரை நடைபெறாத கொடுமை என்றும் அவர் விமர்சித்தார்.
அன்புமணி தனது பெயரை பயன்படுத்தி, தனது பணத்தை பயன்படுத்தி, கட்சிக் கொடியை பயன்படுத்தி செயல்படுவது வேதனை அளிப்பதாகவும், இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதற்காக இந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ராமதாஸ் என தெரிவித்தார்.