தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி.. கோவையில் உச்ச பாதுகாப்பு.. பயணத்திட்டம் என்ன?
PM Modi Visit To Coimbatore: நவம்பர் 19, 2025 அன்று தொடங்கும் இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இயற்கை மற்றும் மீள் உருவாக்கம் செய்யும் விவசாய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்கிறார்.
கோவை, நவம்பர் 18, 2025: கோவையில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு – 25 இல், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக நவம்பர் 19, 2025 தேதி அவர் கோவைக்கு வருகை தருகிறார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தென் மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை வேளாண்மையில் நிபுணத்துவம் பெற்ற 50 விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு:
நவம்பர் 19, 2025 அன்று தொடங்கும் இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இயற்கை மற்றும் மீள் உருவாக்கம் செய்யும் விவசாய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும், பொருளாதார ரீதியாக சாத்தியமான மற்றும் சமூக ரீதியாக உள்ளடக்கிய விவசாயத்தை முன்னேற்றவும் மக்கள் இயக்கத்தை உருவாக்கும் நோக்கில் இந்த உச்சி மாநாடு நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Also Read: SIR பணிகள் புறக்கணிப்பு.. அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை..
இந்த உச்சி மாநாட்டிற்காக சுமார் 300 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களின் பல்வேறு கண்ணோட்டங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, பிராந்திய தேவைகள் மற்றும் வேளாண் – காலநிலை மாறுபாடுகள் பற்றிய விரிவான புரிதலை இது வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை வருகை தரும் பிரதமர் மோடி:
பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாளை பிற்பகல் 1.30 மணியளவில் கோவையை வந்தடைவார். பின்னர் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்திற்குச் செல்கிறார். அங்கு நிகழ்ச்சியில் உரையாற்றி, சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருதுகளை வழங்குவார். மேலும், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். இயற்கை விவசாயத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து இந்த கலந்துரையாடலில் பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா.. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த வைகோ..
கோவையில் 5 அடுக்கு பாதுகாப்பு:
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட பின், அவர் பிற்பகல் 3.15 மணிக்கு கொடிசியா வளாகத்திலிருந்து விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து தனியார் விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகையை முன்னிட்டு மாவட்டத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் வருகை தரும் நிலையில் நாளை மாலை வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் வருகையை ஒட்டி அப்பகுதிகள் முழுவதும் ‘ரெட் சோன்’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளன.