சூடுபிடிக்கும் அரசியல் கள.. அடுத்த மாதம் இரண்டு முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. தே.ஜ கூட்டணியில் வியூகம் என்ன?
தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் இரண்டு முறை தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். ஜனவரி மாதம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார்.

கோப்பு புகைப்படம்
பிப்ரவரி 18, 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்த சூழலில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் தமிழகத்திற்கு இரண்டு முறை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மார்ச் 6ஆம் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ள அவர் வருகை தர உள்ளார். பிரதமர் மோடியின் இந்த வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:
2026 சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. வரக்கூடிய நாட்களில் மேலும் சில கட்சிகள் இணையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க: கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது.. மீறினால் நடவடிக்கை – காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் கொடுத்த வார்னிங்..
தேர்தலை சந்திக்க ஆயத்தமாகும் பாஜக:
பாரதிய ஜனதா கட்சியை எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் ஆழமாக காலூன்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது. அந்தத் தேர்தலில் நான்கு இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக சட்டமன்றத்தில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை அதிக எண்ணிக்கையில் இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 17ஆம் தேதி முதல் தெருமுனைப் பிரச்சாரத்தை பாஜக தொடங்கியுள்ளது.
இந்த சூழலில், அதிமுக கூட்டணியில் பாஜக கிட்டத்தட்ட 50 இடங்கள் கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதற்கு அதிமுக ஒத்துவருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் படிக்க: தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்…3 நாளுக்கான நிகழ்ச்சி நிரல்!
மார்ச் மாதத்தில் இரண்டு முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி:
இந்நிலையில், தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் இரண்டு முறை தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். ஜனவரி மாதம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழகத்திற்கு, அதாவது மதுரை மற்றும் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக வர உள்ளார்.
மார்ச் 1ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளைத் தவிர மேலும் சில கட்சிகள் இணையும் என்றும், அவை மேடையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மதுரையைத் தொடர்ந்து, மார்ச் 6ஆம் தேதி வேலூரில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். வட தமிழகத்தில் கட்சியின் ஆதரவை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் முக்கியத்துவம்:
தமிழகத்தில் எப்படியாவது திமுகவின் ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு யூகங்களையும் கையாண்டு வருகிறது. தெருமுனைப் பிரச்சாரம், டிஜிட்டல் பிரச்சாரம், தரவுகளின் அடிப்படையிலான பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி ஒரே மாதத்தில் இரண்டு முறை தமிழகத்திற்கு வருகை தருவது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இரண்டு பயணங்களையும் ஒருங்கிணைக்க மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் மாநில அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.