20 குழந்தைகள் பலி.. இருமல் மருந்தை தயாரித்த உரிமையாளர் சென்னையில் கைது!

Cough Syrup Death Case : மத்திய பிரதேசத்தில் கோல்டிரிப் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் ஃபார்மா மருந்து உற்பத்தி ஆலை உரிமையாளர் ரங்கநாதன் கைதாகி உள்ளார்

20 குழந்தைகள் பலி.. இருமல் மருந்தை தயாரித்த உரிமையாளர் சென்னையில் கைது!

கைதான மருந்து நிறுவன உரிமையாளர்

Updated On: 

09 Oct 2025 08:28 AM

 IST

சென்னை, அக்டோபர் 09 :  மத்திய பிரதேசத்தில் கோல்டிரிப் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் ஃபார்மா மருந்து உற்பத்தி ஆலையில் உரிமையாளர் ரங்கநாதன் கைதாகி உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருக ஸ்ரீசன் பார்மா என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தும் தயாரிக்கப்பட்டது. இந்த இருமல் மருந்து நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில், மத்திய பிரதேசத்திலும் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்து விற்பனை செய்யப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்தை சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். இருமல் மருந்து சாப்பிட்ட 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த இருமல் மருந்தால் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் குறித்து மத்திய பிரேதச  காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் இந்த இருமல் மருந்தை தமிழகத்தைச் சேர்ந்த  ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனம் உற்பத்தி செய்தது தெரியவந்தது.

Also Read : 2024ல் ஏற்பட்ட தகராறு.. இளைஞர் கொலை.. பழிவாங்கிய நண்பர்!

இருமல் மருந்தை தயாரித்த உரிமையாளர்  கைது

இந்த மருந்தில் ’டை எத்திலுன் கிளைசால்’ என்ற ரசாயனம் இருப்பது தெரியவந்தது. சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய  மை மற்றும் பசை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் டை எதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சுப் பொருள் சிரப் மாதிரிகளில் இருப்பது கண்டறியப்பட்டது.  கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பில் அனுமதிக்கப்பட்ட வரம்பான 0.1 சதவீதத்திற்கு எதிராக 46 முதல் 48 சதவீதம் டை எதிலீன் கிளைகோல் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து இந்த மருந்துக்கு தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தர பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது.  இதனை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். முன்னதாக, ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்த தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

Also Read : ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள்.. அரசை விமர்சித்த அண்ணாமலை

அதோடு, ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவன உரிமையாளர் சென்னை  காவல்துறை உதவியுடன் மத்திய பிரதேச போலீசார் தேடி வந்தனர்.  இந்த நிலையில், 2025 அக்டோபர் 9ஆம் தேதியான இன்று காலை சென்னையில் மத்திய பிரதேச போலீசாரால் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ரங்கநாதன் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என கூறப்படுகிறது.