புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்..
New Year celebration: குறிப்பாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகளால் பெரும் விபத்து, உயிரிழப்பு, குற்றங்கள் இல்லாத புத்தாண்டு தினமாக அமைந்தது. அதோடு, திருச்செந்தூரில் நீண்ட வரிசையில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மெரினா கடற்கரை
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு கோவில்களிலும் சுற்றுலாத் தலங்களிலும் நேற்று மக்கள்திரள் அதிகமாக கூடியது. குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணியஸ்வாமி கோவிலில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர். அதேபோல், சென்னை மெரினா கடற்கரையிலும் குடும்பத்துடன் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகளால் பெரும் விபத்து, உயிரிழப்பு, குற்றங்கள் இல்லாத புத்தாண்டு தினமாக அமைந்தது.
இதையும் படிக்க: Happy New Year 2026: புத்தாண்டை கொண்டாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்ற மக்கள்!
திருச்செந்தூரில் 8 மணி நேர காத்திருப்பு:
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் விசுவரூப தீபாராதனை, உச்சிகாலம், சாயரட்சை மற்றும் ராக்கால வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. புத்தாண்டு நாள் என்பதால் அதிகாலை கடலில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
பழனி, மதுரை, திருச்சியில் பெரும் கூட்டம்:
பழனி முருகன் கோவிலில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருச்சி உச்சிப்பிள்ளையார், மதுரை மீனாட்சி அம்மன், கள்ளழகர் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வேளாங்கண்ணியில் புத்தாண்டு பிரார்த்தனை:
வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆயர் புது வருடத் தீபத்தை ஏற்றி புத்தாண்டு பிறப்பை அறிவித்தார். தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பேராலயத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடாக அதிகளவில் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சுற்றுலாத் தலங்களில் மக்கள் வெள்ளம்:
புத்தாண்டை முன்னிட்டு ஒகேனக்கல் அருவி, கன்னியாகுமரி கடற்கரை, திற்பரப்பு அருவி, ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் பயணிகள் பெருமளவில் திரண்டனர். கன்னியாகுமரியில் புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை பார்க்க வந்தவர்கள், மேகமூட்டத்தால் தெளிவாக காண முடியாமல் ஏமாற்றமடைந்தாலும், பின்னர் பலர் அருகிலுள்ள தளங்களில் பெருமகிழ்ச்சியுடன் நாட்களை கழித்தனர்.
இதையும் படிக்க: 2026 New Year Wishes: ஸ்டாலின் முதல் விஜய் வரை தலைவர்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ஊட்டி மற்றும் கொடைக்கானலில் உள்ள பூங்காக்கள், பிகாரா ஏரி, பைன் காடு, பில்லர் ராக் உள்ளிட்ட இடங்களில் குடும்பங்களுடன் சுற்றுலாப் பயணிகள் அதிகமாகக் காணப்பட்டனர். இதேபோல், சென்னை மெரினா கடற்கரையிலும் குடும்பத்துடன் மக்கள் கூட்டம் அலைமோதியது.