பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டி சாலையில் மயங்கி விழுந்து பலி.. சோக சம்பவம்!
Old Woman Died While Collecting Pongal Gift | கோயம்புத்தூரில் 87 வயது மூதாட்டி ஒருவர் ரேஷன் கடையில் பொங்கல் சிறப்பு பரிசு வாங்க சென்றுள்ளார். அப்போது சாலை ஓரத்தில் திடீரென மயங்கி விழுந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர், ஜனவரி 12 : தமிழகத்தில் (Tamil Nadu) ஜனவரி 15, 2026 அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக அரசு சார்பில் ரூ.3,000 ரொக்க பணம் மற்றும் பொங்கல் சிறப்பு தொகுப்பு ஆகியவற்றை அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு மற்றும் சிறப்பு தொகையை பொதுமக்களுக்கு முறையாக வழங்க டோக்கன்கள் வழங்கப்பட்டு ஜனவரி 08, 2026 முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் சிறப்பு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோயம்புத்தூரில் பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டிக்கு நடந்த சோகம்
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் அருகே உள்ள வேடபட்டி சத்யா நகரை சேர்ந்தவர் வீரம்மாள் என்ற 87 வயது மூதாட்டி. இவரது கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், அவர் கஸ்தூரிநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். யாருடைய ஆதரவும் இன்றி அவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், பொங்கல் பாரிசு தொகுப்பு வாங்குவதற்காக அவர் ஆட்டோவில் நாகராஜபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க : ‘பொங்கலுக்கு குட் நியூஸ்’ – உயரும் மகளிர் உரிமைத் தொகை? அமைச்சர் சொன்ன தகவல்
திடீரென சாலை ஓரத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி
பேருந்து நிலையத்தில் இறங்கிய அந்த மூதாட்டி அங்கிருந்து ரேஷன் கடைக்கு நடந்துச் சென்றுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் சிறப்பு பரிசு வாங்க சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.