சரியான நேரத்திற்கு நெற்பயிர்களை ஏன் கொள்முதல் செய்யவில்லை? இது தான் திராவிட மாடலா? – சீமான் கேள்வி

Seeman Statement: நெல் கொள்முதல் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் உலகமே வியக்கும் நான்கரை ஆண்டு சாதனையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்

சரியான நேரத்திற்கு நெற்பயிர்களை ஏன் கொள்முதல் செய்யவில்லை? இது தான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி

கோப்பு புகைப்படம்

Published: 

23 Oct 2025 13:47 PM

 IST

சென்னை, அக்டோபர் 23, 2025: நெல் பயிர்கள் கொள்முதல் செய்யாதது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். அதில், உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து அநேக மாவட்டங்களில் நல்ல கனமழை பதிவாகி வருகிறது. இந்த சூழலில் வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஏக்கர் கணக்கில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அதே சமயம், கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் நனைந்து வீணானது. இதனால் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.

நெற்பயிர்கள் கொள்முதல் செய்யாததற்கு கண்டனம்:

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் அரும்பாடு பட்டு விளைவித்த நெல் மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் திமுக அரசின் வளர்ச்சியற்ற போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட குறுவை சாகுபடி நெல் மூட்டைகளையும் திமுக அரசு கொள்முதல் செய்ய தாமதிப்பதன் காரணமாக நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர். திமுக அரசு உற்பத்தி செலவுக்கு இணையான மிகக் குறைந்த கொள்முதல் விலையை மட்டுமே நிர்ணயித்துள்ளது. இதனால் விவசாயிகள் வயிற்றை அடைத்து வருகின்றனர். குறைந்தபட்ச கொள்முதல் விலையிலும் உரிய நேரத்தில் நெல் கொள்முதலை திமுக அரசு செய்ய மறுப்பதும் கொடுமையிலும் பெருங்கொடுமை,” என சீமான் தெரிவித்துள்ளார்.

Also Read: நெற்பயிர்களை கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்கு இந்த அரசு? எடப்பாடி பழனிசாமி கேள்வி..

நெல் கொள்முதலில் ஏன் இந்த தாமதம்?

அவர் மேலும், ”ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு அதிக அளவு அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டில் விளைவித்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் தாமதிப்பது ஏன்? நெல் கொள்முதல் நிலையங்களில் ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் விவசாயிகளிடமிருந்து ரூ.40 பெறப்படும் முறைகேட்டை தடுக்க திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: வலுவிழந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்து என்ன? பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்..

இது தான் திராவிட மாடலா?

மேலும் அவர், “திமுகவின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம், பல்லாயிரம் கோடிகள் முதலீடு, பல லட்சம் வேலை வாய்ப்புகள், இருமடங்கு பொருளாதார வளர்ச்சி என்று வெற்றி பெருமை பேசும் திமுக அரசால், தமிழ்நாடு விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகளை பாதுகாக்க கூட போதிய சேமிப்பிடங்கள் கட்ட முடியவில்லை. நெல் கொள்முதல் செய்வதற்கு போதிய சாக்குப் பைகள், சணல் கையிருப்பு இல்லை; மூடி வைக்க தார்பாய்களும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் உலகமே வியக்கும் நான்கரை ஆண்டு சாதனையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்:

இறுதியாக, “தமிழ்நாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுத்து, எவ்வித கையூட்டுக்கும் இடமளிக்காமல், சரியான எடையில் சரியான கொள்முதல் விலையை குறுவை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும். மேலும், தற்போதைய கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரி படுக்கை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.