ஓடும் ரயிலில் வெளிமாநில இளைஞர் வெட்டப்பட்ட சம்பவம்…வடக்கு மண்டல ஐஜி விளக்கம்!
IG Asra Garg Explanation Northern State Youth Attacked: திருத்தணியில் ஓடும் ரயிலில் வட மாநில இளைஞரை 4 சிறுவர்கள் பட்டா கத்தியால் கொடூரமாக வெட்டிய சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம் அளித்து உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ஓடும் ரயிலில் வெளி மாநில தொழிலாளியை 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் பட்டா கத்தியால் கொடூரமாக வெட்டி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட சம்பவம் தமிழகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 சிறுவர்களும் கைது செய்யப்பட்டு அதில், மூன்று சிறுவர்கள் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். ஒரு சிறுவர் மட்டும் படிப்பின் காரணமாக அவரது பெற்றோரிடம் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் சென்னை, ஆலந்தூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதியில் இருந்து திருத்தணிக்கு வந்த ரயிலில் தமிழகத்தை சுற்றி பார்க்க வந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் 4 சிறுவர்களும் ஒரே பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
எதற்காக முறைக்கிறாய் என்று கேட்டு வாக்குவாதம்
அப்போது, வெளி மாநில இளைஞரிடம் எங்களை பார்த்து எதற்காக முறைக்கிறாய் என்று கூறி அந்த சிறுவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கஞ்சா போதையில் இருந்த அந்த சிறுவர்கள் அந்த வெளி மாநில இளைஞரை பட்டா கத்தியால் வெட்டி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளான நபர் தொழிலாளி இல்லை. அவர் சுற்றுலா வந்த இளைஞர்.
மேலும் படிக்க: ஓடும் ரயிலில் வெளிமாநில தொழிலாளிக்கு கத்தி வெட்டு…சரமாரி தாக்குதல்…4 சிறுவர்கள் கைது!




கையில் ஆயுதம் வைத்திருந்ததற்கான காரணம்
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த 4 சிறுவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டனர். ஒரு சிறுவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். முன்னதாக அவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்களுக்கும் மற்ற சிறுவர்களுக்கும் மோதல் இருப்பதால் நாங்கள் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கையில் வைத்திருந்ததாக அந்த சிறுவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இளைஞர் இறந்ததாக தவறான தகவல்
அவர்களிடம் இருந்து 2 பட்டா கத்தி, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது, தாக்குதலுக்குள்ளான வெளிமாநில இளைஞர் இறந்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அவர் சிகிச்சை பெற்று விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
வடமாநில தொழிலாளி என்பதால் தாக்குதலா
இந்த இளைஞர் வடமாநில தொழிலாளி என்பதால் தாக்கப்பட்டதாக கூறுதில் உண்மை இல்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் 500 கிலோ கஞ்சா, 60 ஆயிரம் போதை மாத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த போதை மாத்திரைகளை சப்ளை செய்த டெல்லி, குஜராத், ஹரியானாவில் உள்ள நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு..ராஜபாளையத்தில் எஸ்ஐடி குழு விசாரணை!