திமுகவுக்கு எதிராக அனைவரும் ஓர் அணியில் சேர வேண்டும்.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Nainar Nagendran Calls for United Front Against DMK | திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக அனைவரும் ஓர் அணியில் சேர வேண்டும் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், திமுக குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தூத்துக்குடி, மே 1 : திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (DMK – Dravida Munnetra Kazhagam) எதிராக அனைவரும் ஓர் அணியில் சேர வேண்டும் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் (BJP – Bharatiya Janata Party) தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 30, 2025) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் பேசியுள்ளார். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திமுக அரசுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் சேர வேண்டும் – நயினார் நாகேந்திரன்
நேற்று (ஏப்ரல் 30, 2025) தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அனைவரும் ஓர் அணியில் சேர்ந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA – National Democratic Alliance) வெற்றி பெறும். டெல்லியில் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது கட்சி மற்றும் பூத் கமிட்டிகளை (Booth Committee) பலப்படுத்தி கூட்டணியை சுமுகமான சூழலில் கொண்டு செல்ல வேண்டுமென அவர்கள் ஆலோசனை வழங்கினர் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை. நீதிமன்ற அறிவுறுத்தலை கேட்டு அமைச்சர்கள் மீது தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பது தான் சரியான செயல்பாடுக இருக்கும். நமது நாட்டிலேயே இருந்து கொண்டு இன்னொரு நாட்டுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோக செயல். அவர்களை தேச விரோதிகள் என்று தான் சொல்ல முடியும் என்றும் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
பாஜக மாநில தலைவராக தீவிர பணியாற்றும் நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்து வந்த நிலையில், சமீபத்தில் தேர்தல் நடத்தப்பட்டு அதில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதான தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதனை இலக்காக கொண்டு பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. மேலும், சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடிக்க தமிழக பாஜக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு எதிரான அரசியலை கையில் எடுத்து செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.