கிடைத்தது அனுமதி.. நாகப்பட்டினத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்!
TVK VIjay: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். திருச்சியில் நடைபெற்ற பிரமாண்ட வரவேற்புக்குப் பின், நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

விஜய்
நாகப்பட்டினம், செப்டம்பர் 17: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப்டம்பர் 20ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள நிலையில் போலீசார் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் புதிதாக கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். ஒவ்வொரு வாரமும் மூன்று மாவட்ட மக்களை அவர் சந்திப்பார் என திட்டமிடப்பட்டுள்ளது.
திணறிப்போன திருச்சி
இந்த நிலையில் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய விஜய்க்கு தவெக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாக வரவேற்பளித்தனர். அவர்கள் விஜய்யின் வாகனத்தை சூழ்ந்து கொண்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு திருச்சி மாநகரமே திணறிப்போனது. இதனால் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது விஜய் திருச்சியில் காலை 10:30 மணிக்கு பிரச்சாரம் செய்வார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மதியம் 3 மணிக்கு தான் பரப்புரை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தார்.
Also Read: விஜய் பரப்புரையில் விதிமீறல்.. தவெக நிர்வாகிகள் மீது திருச்சி காவல்துறை வழக்குப்பதிவு!
அந்த அளவிற்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரியலூர் சென்ற விஜய் பெரம்பலூர் மாவட்ட நிகழ்வுக்கு திட்டமிட்டபடி செல்ல முடியவில்லை. இதனால் அந்த மாவட்ட மக்களிடம் வருத்தம் தெரிவித்த அவர் இன்னொரு முறை கண்டிப்பாக வருவதாக உறுதியளித்தார்.
கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி
இந்த நிலையில் அடுத்த கட்ட பயணமாக 2020 செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை விஜய் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக அனுமதி வேண்டி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நாகப்பட்டினம் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவை ஏற்ற காவல்துறையினர் தீவிர ஆலோசனைக்கு பிறகு பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கியது.
நாகையின் ஏழு இடங்களில் பிரச்சார கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் புது ரவுண்டானா பகுதியில் பரப்பரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்கால் வழியாக அந்த மாவட்டத்திற்கு வரும் விஜய்க்கு நாகை மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பளிக்க திட்டமிட்டுள்ளனர். பின்னர் நாகூர் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் சாலையில் பயணித்து புது ரவுண்டானா பகுதியை விஜய் சென்றடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: விஜயகாந்த் போல விஜய் – டிடிவி தினகரன் சொன்ன விஷயம்
இதனை தொடர்ந்து சிக்கல், கீழ்வேளூர் நெடுஞ்சாலை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு விஜய் செல்கிறார். அங்கே கீழ வீதியில் அவர் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதனிடையே திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி காவல்துறையினர் தமிழக வெற்றிக் கழகம் பரப்புரை மேற்கொள்ள கடும் கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளனர்.
அந்த வகையில் பிரச்சார நிகழ்வை எந்த வகையிலும் தாமதப்படுத்தக் கூடாது எனவும், விஜய் பயணிக்கும் வாகனத்தை பின்தொடர கூடாது எனவும் தெரிவித்துள்ளனர் .போக்குவரத்திற்கு தடை ஏற்படக்கூடாது, பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது எனவும் நிபந்தனைகளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.