ஜாமீனில் வந்த ஒரே நாளில்.. இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்.. தூத்துக்குடியில் ஷாக்
Thoothukudi Murder : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இளைஞரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. கையெழுத்திட காவல்நிலையம் சென்ற நிலையில், இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும், அவருடன் வந்த சகோதரரையும் கும்பல் வெட்டியுள்ளது.

மாதிரிப்படம்
தூத்துக்குடி, அக்டோபர் 10 : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளது. முன்பகை காரமணாக நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவரை கும்பல் வெட்டிக் கொன்றது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கொலை சம்பவங்களை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், தொடர்ந்து அரங்கேறி வருகிறது. நாள்தோறும் நடக்கும் கொலைகள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவரை மர்ம கும்பல் கொலை செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே தாமரைமொழி பகுதியைச் சேர்ந்தவர் கந்தையா (48). இவரது உறவினர் அரசப்பன். இவரது மகன் சிவசூரியன்.
இந்த இரு கும்பங்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இதனால், குடும்ப பிரச்னை காரணமாக சிவசூரியன் கந்தையாவை வெட்டிக் கொலை செய்துள்ளார். இதனால், சிவசூரியன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இதனால், ஜாமீன் கோரி சிவசூரியன் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிவசூரியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 2025 அக்டோபர் 8ஆம் தேதியான நேற்று நிபந்தனை ஜாமீனில் சிவசூரியன் வெளியே வந்தார். இதனை அடுத்து, 2025 அக்டோபர் 9ஆம் தேதி தட்டார்மடம் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றுள்ளார்.
Also Read : ரூ.9.5 கோடியில் உயர் ரக கஞ்சா.. அசந்துபோன அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபர!
ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் கொலை
காவல்நிலையத்திற்கு சென்ற அவரை, போலீசார் மாலையில் வருமாறு கூறியுள்ளனர். இதனால், சிவசூரியன் தனது பைக்கில் சென்றுள்ளார். அவருடன் அவரது அண்ணன் சின்னதுரையும் உடன் இருந்தார். இருவரும் பைக்கில் மெஞ்ஞானபுரம் அருகே சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, சிவசூரியன் சென்றுக் கொண்டிருந்த பைக் மீது கார் ஒன்று மோதியுள்ளது.
இதனால் கீழே விழுந்த இருவரை, காரில் வந்தவர்கள் அரிவாளுடன் இருந்தனர். இதனை பார்த்த இருவரும் தோட்டத்திற்குள் ஓடினர். பின் தொடர்ந்து விரட்டிய அந்த கும்பல், சிவசூரியனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
Also Read : அமீபா தொற்றால் சிறுமி பலி… ஆத்திரத்தில் டாக்டரை வெட்டிய தந்தை… கேரளாவில் ஷாக்
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவசூரியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காயம் அடைந்த சின்னதுரையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கூறினர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.