பல்லாவரம் வாரச் சந்தை.. 600 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்..

Chennai Pallavaram Market: அக்டோபர் 24, 2025 தேதியான நேற்றும் பல்லாவரத்தில் வார சந்தை நடைபெற்றது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து, கடைகள் தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பல்லாவரம் வாரச் சந்தை.. 600 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்..

கோப்பு புகைப்படம்

Published: 

25 Oct 2025 07:36 AM

 IST

சென்னை, அக்டோபர் 25, 2025: பல்லாவரம் வார சந்தை, சென்னை பொறுத்தவரையில் மிகவும் பிரபலமான ஒன்று. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வருகை தந்து, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இந்த பல்லாவரம் வார சந்தையில் யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சியான நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதாவது, சுமார் 600 கிலோ காலாவதியான உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வார சந்தையில் கிடைக்காத பொருளே இல்லை எனச் சொல்வார்கள் — உணவுப் பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், ஆடைகள், செடிகள், செல்லப்பிராணிகள் எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும். ஏ.சி., வாஷிங் மிஷின், ஃப்ரிட்ஜ், டிவி, கேமரா, சிசிடிவி கேமரா, குழந்தைகளுக்கான பொருட்கள், அரிசி, பருப்பு, புளி, காய்கறிகள், நாய்க்குட்டி, கோழிகள், காடை, புறாக்கள் என இங்கு கிடைக்காத பொருளே இல்லை.

தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை:

சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வருகை தந்து, தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். ஆனால், சமீப காலமாக இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் சரியில்லை என்றும், காலாவதியான பொருட்கள் விற்கப்படுவதாகவும் மக்கள் தரப்பில் தொடர்ந்த புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன.

மேலும் படிக்க: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 3 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..

அதேபோல், அக்டோபர் 24, 2025 தேதியான நேற்றும் பல்லாவரத்தில் வார சந்தை நடைபெற்றது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து, கடைகள் தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

600 கிலோ உணவுப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்:

அப்போது அங்கு ஐயப்பன் என்ற ஒருவரின் கடையில் ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது கடையில் குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட், கலர் அப்பளம், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் காலாவதியானதாகவும், அதில் இருந்த எக்ஸ்பைரி தேதியை அழித்து குறைந்த விலையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனால் சுமார் 600 கிலோ எடையுள்ள உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க: மகளிர் உரிமை தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு..

இந்த சம்பவத்தையடுத்து ஐயப்பன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலாவதியான பொருட்கள் அவரிடம் யார் கொடுத்தனர், இதில் யார் யார் தொடர்பில் உள்ளனர், இது எத்தனை நாட்களாக நடைபெற்று வருகிறது, இது இந்த சந்தையில் மட்டும்தான் நடைபெறுகிறதா அல்லது வேறு இடங்களிலும் நடைபெறுகிறதா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.