வளசரவாக்கத்தில் பரபரப்பு! பூஜை அறையில் இருந்து கிளம்பிய தீ.. முதிய தம்பதியரை கொன்ற சோகம்..!

Chennai House Fire Kills Elderly Couple: சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகரில் உள்ள பங்களா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதிய தம்பதியர் உயிரிழந்தனர். ஸ்ரீராம் எனும் ஒருவர் மீட்கப்பட்டார். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். காவல்துறையினர் விபத்துக்கான காரணம் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து வீட்டின் பூஜை அறையில் இருந்து தொடங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வளசரவாக்கத்தில் பரபரப்பு! பூஜை அறையில் இருந்து கிளம்பிய தீ.. முதிய தம்பதியரை கொன்ற சோகம்..!

வளசரவாக்கத்தில் தீ விபத்து நடந்த வீடு

Published: 

11 May 2025 17:18 PM

சென்னை, மே 11: சென்னையை அடுத்த வளசரவாக்கத்தில் (Valasaravakkam) உள்ள சவுத்ரி நகரில் பங்களா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதிய தம்பதி நடராஜன், அவரது மனைவி தங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வீட்டில் ஏற்பட்ட (House Fire) தீ விபத்தில் ஸ்ரீராம் என்பவர் மீட்கப்பட்டார். 3 வாகனங்களில் சென்றுள்ள 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இதுகுறித்து காவல்துறையினர் (Chennai Police) வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது..? இந்த சம்பவத்தில் யாருக்காவது தொடர்பு உள்ளதா..? முன் பகை எதுவும் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன நடந்தது..?

சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள சவுத்ரி நகரின் 4வது பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் வசித்து வந்தவர் ஸ்ரீராம். இந்த பங்களாவில் ஸ்ரீராம் தனது மனைவி, மகன்கள் மற்றும் தாய் தந்தையும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று அதாவது 2025 மே 11ம் தேதி காலையில் முக்கியமான வேலை காரணமாக ஸ்ரீராமின் மனைவி வெளியே சென்றுள்ளார். அப்போது, அந்த பங்களா வீட்டில் ஸ்ரீராம் அவரது தாய் தங்கமும், தந்தை நடராஜனும் இருந்துள்ளனர். வழக்கம்போல் அனைவரும் தங்களது வேலையை பார்த்து கொண்டு இருந்துள்ளனர்.

இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மதியம் 1 மணியளவில் அந்த பங்களா வீட்டில் திடீரென்று தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ தொடங்கியதை கண்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிசென்று பார்த்தபோது, பங்களா வீடு முழுவதும் தீ பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டிற்குள் இருந்தவர்கள் கடும் தீ காரணமாக வெளியே வராமல் தவித்து கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கிடைத்த தகவலின்படி 30 தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் வந்து இறங்கி, உடனடியாக தீயணைக்கும் பணியில் தீவிரமாக முயற்சி செய்தனர். அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது, உள்ளே 3 பேர் சிக்கி இருப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டறிந்தனர். அந்த நேரத்தில், ஸ்ரீராம் மட்டும் ஜன்னலை உடைத்துகொண்டு வெளியே குதித்து தப்பியுள்ளார். கீழே குதித்தத்தில் அவருக்கு ஆங்காங்கே காயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, அவரை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேநேரத்தில், வீட்டிற்குள் சிக்கிய ஸ்ரீராமின் தாய், தந்தையான நடராஜன் மற்றும் தங்கம் தீயில் கருகி உயிரிழந்தனர். சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயை முழுமையாக அணைக்க முடியாமல் திணறினர். அப்போது, வளசரவாக்கத்தில் மழை பெய்ததால், தீயணைப்பு வீரர்களுக்கு பணி கொஞ்சம் எளிதானது. இருப்பினும், வயதான தம்பதியை தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்டனர்.

முதற்கட்ட விசாரணை:

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தீயானது வீட்டின் பூஜை அறையில் இருந்து பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் வளசரவாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.