கோவையில் வரலாறு காணாத ஆலங்கட்டி மழை; சேதமடைந்த பயிர்
Coimbatore Damages Crops: கோவையில் திடீர் ஆலங்கட்டி மழை பெய்து 12 மணி நேரம் பனிக்கட்டிகள் கரையாமல் இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்தன. விவசாயிகள் நிவாரணம் கோரி அரசை அணுகியுள்ளனர். அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஆலங்கட்டி மழை
கோவை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு நடுவே திடீரென வரலாறு காணாத ஆலங்கட்டி மழை பெய்தது.
அன்னூர் அருகே பல பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக பனிக்கட்டிகள் கரையாமல் இருந்தது அதிர்ச்சி அளித்தது. இந்த மழையால் சாலைகள் பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் இடர்பாடுகளை சந்தித்தனர். முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் பிற பயிர்கள் சேதமடைந்தன. விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வேதனை தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெயில் தாக்கம் அதிகரித்த நிலையில் ஏற்பட்ட வானிலை மாற்றம்
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் அதிகரித்து வருகிறது. கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏப்ரல், மே மாதத்தில் இருக்கும் நிலை, தற்போதே இருக்கிறது என்று கூறுகின்றனர். இந்த அசாதாரண வெப்பநிலை காரணமாக மக்கள் தினசரி வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக மதிய நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலை உருவாகி, உடல்நலப் பிரச்சனைகள் கூட அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் திடீர் ஆலங்கட்டி மழை
இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. குறிப்பாக கோவை மாவட்டம் அன்னூர் அருகே கணுவக்கரை, ஆம்போதி உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத ஆலங்கட்டி மழை பெய்த நிலையில், 12 மணி நேரம் கடந்தும் பனிக்கட்டிகள் கரையாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெயிலின் உச்சத்தில் இருந்த சூழ்நிலையில் திடீரென ஏற்பட்ட இந்த மழை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகள் பரவியதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்: சுகாதாரத் துறை எச்சரிக்கை
விவசாய பயிர்களுக்கு கடும் சேதம்
இதனால் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், பாக்கு மற்றும் கப்பக்கிழங்கு பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பல மாதங்களாக உழைத்து வளர்த்த பயிர்கள் சில நிமிடங்களில் அழிந்துவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக வாழைத் தோட்டங்கள் பெருமளவில் சேதமடைந்ததால், பொருளாதார ரீதியாக பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாதித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
நிவாரணம் கோரும் விவசாயிகள்
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு உடனடி உதவி வழங்கி இழப்புகளை ஈடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், எதிர்காலத்தில் இத்தகைய இயற்கை பாதிப்புகளை சமாளிக்க தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.