மனைவியை கொடூரமாக கொன்றுவிட்டு நாடகம்… கைதான இந்து முன்னணி நிர்வாகி… நடந்தது என்ன?
Namakkal Crime News : நாமக்கல் மாவட்டத்தில் மனைவி கொலை செய்தவிட்டு நாடகமாடிய இந்து முன்னணி நிர்வாகி ஜெகதீசனை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. குடும்ப தகராறில், ஜெகதீசன், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், தன்னை தானே அரிவாளால் தனது கையை வெட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாமக்கல், மே 13 : நாமக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகி மனைவி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40). இவரது மனைவி கீதா (36). இந்த தம்பதிக்கு 10 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் பரமத்தி வேலூரில் உள்ள போத்தனூர் மேட்டுத் தெருவில் வீட்டில் வசித்து வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால், அவர்களது இரு மகள்களும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால், ஜெகதீசன் மற்றும் கீதா தனியாக வசித்து வந்துள்ளனர். கட்சி அலுவலகம் வீட்டிற்கு முன் பகுதியில் உள்ளது.
மனைவியை கொடூரமாக கொன்றுவிட்டு நாடகம்
இந்த நிலையில், சம்பவத்தன்று இவர்களின் அலறல் சத்தம் கேட்டு இருக்கிறது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே, அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, இருவரும் அரிவாள் வெட்டுன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதனை பார்த்த உடனேயே, அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மனைவி கீதா உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும், ஜெகதீசன் கையில் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இறந்தவரின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினர். நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணன் குற்றம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அக்கம் பக்கத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். மேலும், ஜெகதீசனிடமும் விசாரணை நடத்தினர்.
இந்து முன்னணி நிர்வாகி கைது
அப்போது, தனது மனைவி கீதாவை அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்தனர். இதனை தடுக்க வந்த தன்னையும் வெட்டியுள்ளதாக அவர் கூறினார். ஆனால், இதுகுறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், ஜெயதீசனிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
அதாவது, குடும்ப தகராறில் மனைவி கீதாவை, ஜெகதீசன் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தனது கையை வெட்டிக் கொண்டதாக ஜெகதீசன் போலீசார் ஒப்புக் கொண்டு இருக்கிறார். இதனை அடுத்து, அவரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, 2025 மார்ச் மாதத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்துள்ளார். தம்பதிக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்தது. அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில், மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.