சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அதிரடி மாற்றம்.. புதிய ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம்..
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார். பதவியில் இருந்து மாற்றப்பட்ட காவல் ஆணையர் அருண், வாக்குப்பதிவு முடியும் வரை எந்த தேர்தல் தொடர்பான பணிகளிலும் ஈடுபட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 10, 2026: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் தரப்பில் முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்:
இந்த சூழலில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த முருகானந்தம் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக சாய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: ஒருபக்கம் மழை… மறுபக்கம் கொதிக்கும் வெப்பம்.. எங்கெங்கு தெரியுமா?
அதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக செயல்பட்டு வந்த டேவிட்சன் தேவா ஆசீர்வாதமும் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகர ஆணையர் அருண் பணியிட மாற்றம்:
இதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் ஒரு அதிரடி பணியிட மாற்றம் தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார். பதவியில் இருந்து மாற்றப்பட்ட காவல் ஆணையர் அருண், வாக்குப்பதிவு முடியும் வரை எந்த தேர்தல் தொடர்பான பணிகளிலும் ஈடுபட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த மாதம் 8 ஐஏஎஸ் அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருவது அரசியல் கட்சிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல் போட்டி.. நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ இயக்கம் என அறிவிப்பு..
குறிப்பாக, தலைமை செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும், பாஜகவுக்கு ஆதரவான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.