அக்டோபர் 3ஆம் தேதியும் விடுமுறை அளிக்க முடிவு? முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு..
Tamil Nadu CM MK Stalin: 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி ஆயுத பூஜையும், அக்டோபர் 2ஆம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதனால் பலரும் அக்டோபர் 3, 2025-ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, செப்டம்பர் 26, 2025: வரவிருக்கும் அக்டோபர் 3, 2025 அன்று விடுமுறை வழங்க வேண்டும் எனக் கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அடுத்த வாரம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என இரண்டு நாட்கள் முறையே புதன், வியாழக்கிழமைகளில் கொண்டாடப்படுகின்றன. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஒரு வேலை நாளாக இருக்கும் நிலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை நாட்களாக உள்ளன. இதனால் நடுவில் உள்ள அந்த ஒரு வேலை நாளையும் அரசு விடுமுறையாக அறிவித்தால் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதற்காகவே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்க மனு:
பொதுவாக பண்டிகை நாட்கள் அல்லது விசேஷ நாட்களில், மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு, அதாவது 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி ஆயுத பூஜையும், அக்டோபர் 2ஆம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாட்களைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. நடுவில் உள்ள வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருப்பதால், ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் தொடர்ச்சியான விடுமுறையை அனுபவிக்க முடியாது. இதனால் பலரும் அக்டோபர் 3, 2025-ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும் படிக்க: தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை.. விசாரணையில் ட்விஸ்ட்!
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில்,
“அக்டோபர் 1ஆம் தேதி ஆயுத பூஜை அரசு விடுமுறையாகவும், அக்டோபர் 2ஆம் தேதி விஜயதசமி அரசு விடுமுறையாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறை நாட்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வருகின்றன. அடுத்து வரும் அக்டோபர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது.
அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே, அக்டோபர் 3ஆம் தேதியையும் அரசு விடுமுறையாக அறிவித்தால், ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். இதனால் தசரா பண்டிகையை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களும் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி திரும்ப முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏற்கனவே இந்நாட்களில் தசரா விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அக்டோபர் 3ஆம் தேதியையும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இரண்டு திருமணம் ஓவர்.. மூன்றாவதாக தொடர்பு.. மகளை கொன்ற தந்தை!
அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?
வழக்கமாகவே, இத்தகைய சூழல்களில் அரசு முன்வந்து நடுவில் உள்ள ஒரு நாள் வேலை நாளை அரசு விடுமுறையாக அறிவித்து, அதற்குப் பதிலாக வேறு ஒரு சனிக்கிழமையை வேலை நாளாக அறிவித்து வந்துள்ளது. தற்போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் அக்டோபர் 3, 2025 அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.