இன்று தொடங்கும் குப்பை திருவிழா.. குப்பைக் கிடங்குகளே இல்லாத தமிழகத்தை நோக்கிய அரசின் பயணம்..
Kuppai Thiruvizha: ஜனவரி 21 முதல் 23, 2026 வரை நடைபெறவுள்ள “குப்பைத் திருவிழா” எனும் மாபெரும் குப்பை சேகரிப்பு இயக்கம், தூய்மை பணியை நிர்வாக நடவடிக்கையிலிருந்து சமூக இயக்கமாக மாற்றும் நோக்கில் இந்தியாவில் தொடங்கப்படும் முதல் முயற்சியாகும். குப்பைகளை பொறுப்புடன் ஒப்படைக்கும் கலாச்சாரத்தை உருவாக்குவதே இதன் மைய நோக்கமாகும்.

கோப்பு புகைப்படம்
ஜனவரி 21, 2026: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், ஜனவரி 21, 2026 முதல் ஜனவரி 23, 2026 வரை, மூன்று நாட்களுக்கு “குப்பை சேகரிப்பு இயக்கம்” நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குப்பையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு இந்த “குப்பைத் திருவிழா”வைக் நடத்த உள்ளது. குப்பைக் கிடங்குகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதும், குப்பைகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வளமாக மாற்றும் முறைக்கு மாறுவதும் இதன் முக்கிய குறிக்கோள்களாகும்.
குப்பை திருவிழா:
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025 ஏப்ரல் 2ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் “தூய்மை இயக்கம்” அறிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்குப் பார்வை, 2025 ஜூன் 5ஆம் தேதி செயல்வடிவம் பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடி மேற்பார்வையில், 1,100-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் பிரம்மாண்டமான குப்பை சேகரிப்பு இயக்கம் நடத்தப்பட்டது.
மேலும் படிக்க: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. அப்போ பனிமூட்டம் இருக்குமா?
இந்த இயக்கம் பொது சுகாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு பன்முகத் திட்டமாகும். உருவாகும் குப்பைகள் குப்பைக் கிடங்குகளுக்குச் செல்லாத நிலையை (“Zero Waste to Landfill”) உறுதி செய்து, அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வளமாக மாற்றுவதே இத்திட்டத்தின் லட்சியமாகும்.
குப்பையிலிருந்து வளம்:
2025 ஜூன் முதல் டிசம்பர் வரை அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட நான்கு கட்ட குப்பை சேகரிப்பு இயக்கங்களின் மூலம், குப்பைக் கிடங்குகளுக்குச் செல்லவிருந்த 2,877 டன் கழிவுகள் தடுக்கப்பட்டு, அதன் மூலம் சுமார் ரூ.3.79 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
குப்பைத் திருவிழா-ஒரு மக்கள் இயக்கம்:
ஜனவரி 21 முதல் 23, 2026 வரை நடைபெறவுள்ள “குப்பைத் திருவிழா” எனும் மாபெரும் குப்பை சேகரிப்பு இயக்கம், தூய்மை பணியை நிர்வாக நடவடிக்கையிலிருந்து சமூக இயக்கமாக மாற்றும் நோக்கில் இந்தியாவில் தொடங்கப்படும் முதல் முயற்சியாகும். குப்பைகளை பொறுப்புடன் ஒப்படைக்கும் கலாச்சாரத்தை உருவாக்குவதே இதன் மைய நோக்கமாகும்.
மேலும் படிக்க: கோவையில் ரூ.2.5 கோடியில் மின்விசை படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலம்…என்ன வசதிகள்..எங்கு அமைகிறது!
குப்பைகளால் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் (GVPs) கண்டறிந்து சுத்தம் செய்யப்படும். மேலும், இந்த மூன்று நாட்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தரம் பிரிக்கப்பட்ட உலர் கழிவுகளை சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குப்பைத் திருவிழாவின் முக்கிய அம்சங்கள்:
-
குப்பை சேகரிப்பு மையங்கள்: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், ஜனவரி 21 முதல் 23, 2026 வரை குப்பை சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
-
GVPs மீட்டெடுத்தல்: குப்பைகள் கொட்டப்படும் இடங்களை சுத்தம் செய்து, பூங்காக்கள் அல்லது சுவர் ஓவியங்கள் கொண்ட இடங்களாக மாற்றுதல். இவ்விடங்களை கண்காணிக்க “தூய்மை TN” செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-
தூய்மை சுழற்சி அமைப்பு: உள்ளாட்சி அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயல்படுதல்.
-
வள மீட்பு மையங்கள்: நகர்ப்புற வார்டுகள் மற்றும் ஊராட்சிகளில் சேகரிப்பு மையங்கள் அமைத்து, CTCL நிர்ணயித்த குறைந்த விலைப்பட்டியலின்படி கழிவுகளை வளமாக மாற்றுதல்.
-
மகளிர் தூய்மை இயக்கம்: 52 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுப் பெண்களை மாற்றத்தின் தூதுவர்களாக செயல்படுத்துதல்.
-
பழக்க மாற்றம்: தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே வழங்கும் பழக்கத்தை மக்களிடையே உருவாக்குதல்.
“குப்பைக் கிடங்குகளே இல்லாத தமிழகம்” என்பதே அரசின் இறுதி லட்சியமாகும். இதற்காக 2026ஆம் ஆண்டிற்கான கழிவு சேகரிப்பு நாட்காட்டி (Waste Collection Calendar) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்காட்டியின்படி, ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமையும் வார இறுதியிலும் பல்வேறு வகை கழிவுகள் சேகரிக்கப்பட உள்ளன.