விசாரணைக்கு சென்ற போலீசாரை கடுமையாக தாக்கிய இளைஞர்கள் – 5 பேர் கைது – பரபரப்பு தகவல்
Police Inquiry Attack Case : குடியாத்தம் அருகே விசாரணைக்காக சென்ற காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாதிரி புகைப்படம்
வேலூர், பிப்ரவரி 9 : வேலூர் (Vellore) மாவட்டம் குடியாத்தம் அருகே விசாரணைக்காக சென்ற காவல்துறையினர் (Police) மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியாத்தம் அருகேயுள்ள முனாப் டிப்போ என்ற பகுதியைச் சேர்ந்த அக்பர் பாஷா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் சித்தூர் கேட் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடையில் இருந்த அக்பர் பாஷா தனது செல்போனில் பேசியபடி இருந்திருக்கிறார். இதனைப் பார்த்த இஸ்மாயில், இங்கே நடக்கும் பிரச்னையைப் பற்றி யாரிடம் சொல்கிறாய் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, வாங்க வேண்டிய பொருட்கள் பற்றி தன் வீட்டில் பேசியதாக அக்பர் பாஷா விளக்கம் அளித்திருக்கிறார்.
இளைஞர் மீது தாக்குதல்
ஆனால் இதை நம்பாத இஸ்மாயில் தனது நண்பர்களை வரவழைத்து அக்பர் பாஷா மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாக்குதலில் காயமடைந்த அக்பர் பாஷா, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிக்க : தவெக வருகையால் திமுக வாக்கு வங்கி பாதிக்கும் – டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, பிப்ரவரி 8, 2026 அன்று இஸ்மாயிலும் அவரது நண்பர்களும் அக்பர் பாஷா வசிக்கும் முனாப் டிப்போ பகுதிக்கு சென்று, அங்கு அக்பர் பாஷாவின் நண்பர் அர்ஷாத் என்பவரையும் இரும்புக் கம்பிகள் மற்றும் கட்டைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து படுகாயமடைந்த அர்ஷத்தை அப்பகுதி மக்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசாரை தாக்கிய இளைஞர்கள்
இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்ட இஸ்மாயில் மற்றும் அவரது நண்பர்களும் கடார்பேட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் துணை ஆய்வாளர் சிலம்பரசன், காவலர் கேசவன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இஸ்மாயில் மற்றும் அவரது கூட்டாளிகள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒரு கட்டத்தில் போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : சென்னை-குருவாயூர் ரயிலில் திடீர் புகை? சந்தேகத்தால் அபாய சங்கிலியை இழுத்த பயணி…அடுத்த நடந்த ட்விஸ்ட்!
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இஸ்மாயில் மற்றும் அவரது நண்பர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இதனையடுத்து இஸ்மாயில், சலீம், அஜாம், ஹுசைன், மெஹபூப் பாஷா ஆகிய ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.