SIR கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16ம் தேதி வெளியிடப்படும் என்றும், வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் ஜனவரி 15க்குள் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஐஆர் பணிகள்
SIR கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க டிச.11ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. SIR படிவங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சரியாக ஒரு மாத காலம் வரை இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து டிசம்பர் 7, 2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், பிப்ரவரி 9, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
மேலும் படிக்க: ‘தித்வா புயல்’ எதிரொலி: தென் தமிழகத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு குளிர்!!
SIR பணிகளுக்கு கடும் எதிர்ப்பு:
அதேசமயம், 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுவதாகவும், படிவங்களை பூர்த்தி செய்வதில் மக்களுக்கு பெரும் குழப்பங்கள் நீடித்து வருவதாகவும் கூறி, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அதோடு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் எனக் கூறவில்லை, அப்பணிகளுக்கு இது சரியான நேரமில்லை என்றே கூறவதாகவும், தேர்தலுக்கு பின்னால் இப்பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் வலியுறுத்தி வந்தன.
கால நீட்டிப்பு வழங்க மறுத்து தேர்தல் ஆணையம்:
எனினும், தேர்தல் ஆணையம் எதிர்ப்புகள் எதனையும் பொருட்படுத்தாமல் இருந்து வந்தது. அரசியல் கட்சிகள் எதிர்ப்பை தாண்டி, பிஎல்ஓக்கள் கூட தங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், மன அழுத்தம் ஏற்படுவதாகவும் கூறியவர்கள் கூடுதல் அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், தேர்தல் ஆணையம் அதனையும் பொருட்படுத்தவில்லை. தமிழகத்தில் திட்டமிட்டபடி SIR பணிகள் ஒரு மாத காலம் மட்டுமே நடைபெறும் என்றும் கால நீட்டிப்பு வழங்கப்படாது எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெளிவுபடுத்தினார்.
கால நீட்டிப்பு வழங்கிய தேர்தல் ஆணையம்:
இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கிளம்பிய கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்கும் தேதியை நீட்டித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16ம் தேதி வெளியிடப்படும் என்றும், வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் ஜனவரி 15க்குள் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோவையில் 3 மணி நேரத்தில் 13 வீடுகளில் கொள்ளை – என்ன நடந்தது?
அதேபோல், ஆட்சேபனைகள் குறித்து பிப்.7ம் தேதிக்குள் அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள தேர்தல் ஆணையம், அதனைத்தொடர்ந்து, பிப்.14ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.