கிறிஸ்துமஸை முன்னிட்டு கேக் தயாரிப்பு… நாமக்கலில் முட்டை விலை புதிய உச்சம் – எவ்வளவு தெரியுமா?
Egg Price Hike: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் தேவை அதிகரிப்பதால் நாமக்கலில் முட்டை விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் சில்லறை கடைகளில் முட்டை விலை அதிகரிக்கும் என்பதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மாதிரி புகைப்படம்
நாமக்கல், டிசம்பர் 20: கிறிஸ்துமஸ் (Christmas) மற்றும் புத்தாண்டு பண்டிகை முன்னெச்சரிக்கையாக கேக், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு அதிகரித்துள்ளதால், தமிழ்நாட்டின் முக்கிய முட்டை உற்பத்தி மையமான நாமக்கலில் (Namakkal) முட்டை விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு முட்டையின் மொத்த விற்பனை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து வருவதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சில்லறை கடைகளில் ஒரு முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
நாமக்கலில் முட்டை விலை புதிய உச்சம்
நாமக்கல் மாவட்டத்தின் முட்டை விலையைப் பொறுத்து, இந்தியா முழுவதும் முட்டை விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாமக்கலில் ஏற்பட்ட இந்த விலை உயர்வு காரணமாக பிற மாநிலங்களிலும் முட்டை விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலங்களில் கேக், பிஸ்கட் உள்ள பேக்கரி பொருட்களின் தேவை பல மடங்கு அதிகரிக்கும். இதற்காக பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்கள் அதிக அளவில் முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்கின்றன. இதனால், முட்டைகளுக்கான டிமாண்ட் அதிகரித்து, நேரடியாக பண்ணைகளிலிருந்து பெருமளவில் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா? இனி உடனடி தீர்வு – என்ன செய்ய வேண்டும்?
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் கோடிக்கணக்கான முட்டைகள் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஆனால், தற்போது அதிகரித்துள்ள தேவைக்கு ஏற்ப உற்பத்தி உயராததும் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், கோழித் தீவனம் விலை உயர்வு, மின்சார கட்டணம், தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதும் முட்டை விலை உயர்வுக்கு காரணமாக உள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
சில்லறை கடைகளில் எதிரொலிக்கும் விலை உயர்வு
நாமக்கலில் கோழி பண்ணை விலை ரூ.6.50 ஆக உயர்ந்துள்ள நிலையில், சில்லறை சந்தைகளில் ஒரு முட்டை ரூ.7 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில நகர்ப்புற பகுதிகளில் இதைவிட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் குற்றம்சாட்டுகின்றனர். தினசரி உணவில் முட்டையை முக்கியமாக பயன்படுத்தும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது.
இதையும் படிக்க : வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? இப்படி மீண்டும் விண்ணப்பிக்கலாம்!!
முட்டை உற்பத்தியாளர்கள் கூறுகையில், இந்த விலை உயர்வு தற்காலிகமானது என்றும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலம் முடிந்த பிறகு கேக் மற்றும் பேக்கரி தயாரிப்புகள் குறையும்போது விலை ஓரளவு குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், குளிர்காலத்தில் முட்டை உற்பத்தி சற்று குறைவாக இருக்கும் என்பதால், உடனடியாக விலை பெரிதாக குறைய வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.