Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

SIR பணிகள்: கள ஆய்வுக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகை!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் இன்று தமிழகம் வருகை தருகின்றனர். தொடர்ந்து, டிச.4க்குள் இப்பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படிவம் விநியோகமே நிறைவு பெறவில்லை.

SIR பணிகள்: கள ஆய்வுக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகை!
இந்திய தேர்தல் ஆணையம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Nov 2025 08:48 AM IST

சென்னை, நவம்பர் 24: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) மதிப்பாய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூன்று நாள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். அவர்கள் இன்று நவ.24 முதல் 26ம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று அங்கு நடக்கும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர். கடும் எதிர்ப்பையும் மீறி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (SIR) இந்த மாதம் (நவ.4) தொடங்கி தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நடவடிக்கையில் மாநிலம் முழுவதும் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், 2.38 லட்சம் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் முகவர்களாக (BLA) பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படிக்க : டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னையில் குடிநீர் மீட்டர் பொருத்தம்.. இதன் பயன்பாடும் முக்கிய அம்சங்களும் என்ன?

SIR பணிகளை முடிக்க 10 நாட்களே உள்ளன:

தொடர்ந்து, டிச.4ம் தேதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட வேண்டும். இதனிடையே, தங்களது அன்றாட அலுவலக பணிகளுக்கு மத்தியில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள இப்பணிகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக பிஎல்ஓக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வருவாய்த்துறையினர் இப்பணிகளை முற்றிலும் புறக்கணித்துள்ளனர். அதேபோல், கேரளா மாநிலம் முழுவதும் பிஎல்ஓக்கள் SIR பணிகளை புறக்கணித்தனர். குறிப்பாக பல்வேறு மாநிலங்களிலும் பணிச்சுமை காரணமாக பிஎல்ஓக்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

95.58% SIR படிவங்கள் விநியோகம்:

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த அக்.27ம் தேதி நிலவரப்படி மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது வரை தமிழகத்தில் 6.12 கோடி படிவங்கள், அதாவது 95.58% படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒருபக்கம் படிவகள் விநியோகிக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் நிரப்பிய படிவங்களை திரும்பப் பெறும் பணிகளும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தமிழகம் வருகை:

அந்தவகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) மதிப்பாய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூன்று நாள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திகுறிப்பில், 2026ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : நவம்பர் 22 முதல் 25 வரை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த பி.பவன், துணை இயக்குநர் தேவன்ஷ் திவாரி ஆகியோர் சென்னையில் எஸ்ஐஆர் செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்வார்கள். அதைத்தொடர்ந்து, அவர்கள் கள அளவிலான ஆய்வுகளை மேற்கொள்வார்கள். இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் திவாரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கும் கணக்கீட்டு படிவங்கள், அவற்றை இணையத்தில் பதிவேற்றுதல் போன்ற பணிகளை நேரடியாக பரிசோதிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.