’ஒருவர் மீது பழி போட விரும்பல’ கரூர் துயரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு

CM Stalin On TVK Rally Stampede : கரூர் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அதாவது, துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

’ஒருவர் மீது பழி போட விரும்பல கரூர் துயரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு

Cm Mk Stalin (11)

Updated On: 

04 Oct 2025 12:47 PM

 IST

சென்னை, அக்டோபர் 04 : கரூர் சம்பவம் குறித்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம் என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும்.

இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப்படும். தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம்.

Also Read : ‘உண்மை வெளியே வரும்’ கரூர் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி!

’ஒருவர் மீது பழி போட விரும்பல’


தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும். துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது” என்று குறிப்பிட்டார்.

கரூர் சம்பவம்

2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கரூர் போலீசார் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், நிர்மல் குமார் மற்றும் ஆனந்த் தலைமறைவாகி உள்ளனர்.

Also Read : தீபாவளிக்கு முன் சப்ரைஸ்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள்.. தேதி குறித்த தமிழக அரசு

அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதோடு, ஆதவ் அர்ஜுனாவையும் தனிப்படை போலீசார் கைது செய்ய உள்ளனர். கரூர் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதை அடுத்து, நீதிமன்றம் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதோடு, தவெக சார்பில் சிபிஐ விசாரணை கோரிய மனுவும், ஆனந்தின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதோடு,  ஐபிஎஸ் அதிகாரி அஸ்ராக் கார்க் தலைமையில சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.