பாலியல் புகார்.. திமுக இளைஞரணி நிர்வாகி நீக்கம்.. உதயநிதி ஸ்டாலின் உத்தரவு!
DMK Dheiva Seyal : அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து தெய்வச் செயல் நீக்கப்பட்டுள்ளார். பெண் அளித்த பாலியல் புகாரை அடுத்து, தெய்வச் செயல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அந்த பொறுப்புக்கு கவியரசு என்பவரை உதயநிதி ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, மே 21 : பாலியல் புகாரை தொடர்ந்து, அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து தெய்வச் செயல் நீக்கப்பட்டுள்ளார். எனவே, அந்த பொறுப்பு கவியரசு என்பவரை நியமனம் செய்து உதயநிதி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வச் செயல். இவர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர் மீது சமீபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை கிளப்பியது. திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச் செயல் தன்னை திருமணம் செய்து கொண்டு வன்கொடுமை செய்து விட்டதாகவும், தன்னை போலவே 20க்கும் மேற்பட்ட பெண்களை அவர் ஏமாற்றியதாகவும் அந்த பெண் பரபரப்பு புகார் அளித்தார்.
திமுக இளைஞரணி நிர்வாகி நீக்கம்
சென்னை டிஜிபி அலுவலகத்தில் அந்த பெண் திருமண மோசடி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், கல்லூரிக்கு செல்லும் வழியில் என்னை தாக்கி தொலைபேசியை உடைத்தார் என்றும் அந்த பெண் கூறியிருந்தார்.
மேலும், காவல்துறையை அணுகினால் தனது பெற்றோரை தீயிட்டுக் கொலை செய்வதாக தெய்வச் செயல் மிரட்டியதாகவும் அந்த பெண் குற்றச்சாட்டினார். மேலும், தன்னையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக கூறினார். இந்த பெண்ணின் புகாரை அடுத்து, தெய்வச் செயல் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய தெய்வச் செயல் மீது கட்சி சார்பில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச் செயல் அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து, அந்த பொறுப்பு கவியரசு என்பவரை உதயநிதி ஸ்டாலின் நியமித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அதிரடி
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக “சார்”களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த வழக்கில் FIR பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 19, 2025
முன்னதாக, இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு காவல்துறை தாமதப்படுத்தியதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்.
20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது இந்த “டம்மி அப்பா” அரசு நடவடிக்கை எடுக்குமா எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்” என்று கூறியிருந்தார். இந்த சூழலில், உதயநிதி ஸ்டாலின் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தெய்வச் செயலை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.