மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது?.. வெளியான முக்கிய தகவல்!
Free Laptop Scheme 2025: தமிழ்நாடு அரசின் 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்புகள் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு லேப்டாப்பிலும் 15 அங்குல ஸ்கிரீன், 8ஜிபி ரேம், 256ஜிபி ஹார்ட் டிஸ்க் மற்றும் மைக்ரோசாப்ட் மென்பொருள் ஆகியவை இடம்பெறும்.

தமிழ்நாடு, ஆகஸ்ட் 22: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தபோது அந்த தேர்தலில் அவர்கள் வெற்றிக்கு காரணமாக பல்வேறு வாக்குறுதிகள் அமைந்தது. அதில் ஒன்றுதான் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவ மாணவியர்கள் பயன்பெற்றனர். இன்றைக்கு நிதி நிலைமையில் முன்னேறியுள்ள பல்வேறு மாணவர்களுக்கு அன்றைக்கு அதிமுக அரசில் வழங்கப்பட்ட லேப்டாப்புகள் பெரிதும் கை கொடுத்தது.
நிறுத்தப்பட்ட லேப்டாப் திட்டம்
இப்படியான நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த திட்டமானது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியான அதிமுக வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த 2025 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சுமார் ரூ.2000 கோடி செலவில் 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடியாக அறிவித்தார்.
Also Read: 20 லட்ச மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தமிழ்நாடு அரசு டெண்டரில் 3 முக்கிய நிறுவனங்கள்..!




மீண்டும் தொடங்கும் திட்டம்
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதால் இது எப்போது செயல்படுத்தப்படும் என்ற கேள்வி மாணவ, மாணவியர்களிடையே இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல், பொறியியல், வேளாண்மை, மற்றும் மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் இருந்து முதற்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்புகளை வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டு அது முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட டெண்டர் செயல்முறையாக இறுதி கட்டத்தில் இருப்பதால் விரைவில் அதாவது 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் லேப்டாப் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: லேப்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தாதீங்க – எச்சரிக்கும் மத்திய அரசு – காரணம் என்ன?
இந்த இலவச லேப்டாப் திட்டத்தை செயல்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடியை சேர்ந்த ஆசிரியர்கள் தேசிய தகவல் மைய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு லேப்டாப்பும் 15 அங்குல ஸ்கிரீன், 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஹார்ட் டிஸ்க், அத்தியாவசிய கல்வி தொடர்பான மென்பொருள் மற்றும் கருவிகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும் என சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் மைக்ரோசாப்ட் மென்பொருளை ஒரு வருடத்திற்கு இந்த லேப்டாப்பில் இலவசமாக பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் திட்டத்தால் 4,600 க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகள் பயனடையும் என தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் அக்டோபருக்குள் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற பதிவு செய்துள்ள அனைத்து மாணவர்களும் ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.