Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காற்றின் தரம் அறிய சென்சார் பலகைகள்.. சென்னை முழுவதும் வருகிறது.. அசத்தும் மாநகராட்சி!!

Chennai Corporation's initiative: முதல் கட்டமாக, சென்னையில் 75 இடங்களில் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் டிஜிட்டல் பலகைகள் ரூ.6.36 கோடி செலவில் நிறுவப்பட உள்ளது. இவை, காற்றில் உள்ள தூசியின் அளவு, காற்றின் வேகம், மழைப்பொழிவு உள்ளிட்ட 19 வகையான தரவுகளை நிகழ்நேரத்தில் காண்பிக்கும்.

காற்றின் தரம் அறிய சென்சார் பலகைகள்.. சென்னை முழுவதும் வருகிறது.. அசத்தும் மாநகராட்சி!!
சென்னை மாநகராட்சி நடவடிக்கை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Jan 2026 08:01 AM IST

சென்னை, ஜனவரி 17: பொதுமக்கள் காற்றின் தரத்தை அறிந்துகொள்ளும் வகையில், சென்னை மாநகரம் முழுவதும் 100 இடங்களில் டிஜிட்டல் காட்சிப் பலகைகளை நிறுவும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. காற்று மாசுபாடு ஒரு உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சனையாகும். காற்று மாசுபாடு காரணமாக சுவாசக் கோளாறுகள் மற்றும் இதய நோய்கள் உட்பட பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நகரின் முக்கிய பகுதிகளை ஒட்டி, பல பெரும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. சென்னையில் காற்று மாசு ஏற்பட அவையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. அதோடு, அதிகரித்து காணப்படும் மக்கள் தொகை, வாகன பயன்பாடு என ஏராளமான காரணங்கள் உள்ளன. இந்த சூழ்நிலையில், காற்றின் தரத்தை மக்கள் அறிய மாநகராட்சி புதிய முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது.

இதையும் படிக்க: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது.. நோட் பண்ணுங்க..

100 இடங்களில் சென்சார் பலகைகள்:

அந்தவகையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் காற்றின் தரத்தைக் கண்காணிக்க, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் சென்சார் பலகைகளை நிறுவ சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 100 இடங்களில் சென்சார் பலகைகள் நிறுவப்பட உள்ளன. இது பொதுமக்கள் காற்றின் தரம் குறித்து அறிந்துகொள்ள உதவும். முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தின் நுழைவாயில் அருகே ஒரு சென்சார் பலகை நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதிக்குள் 100 இடங்களில் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் டிஜிட்டல் பலகைகளை நிறுவ மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

மக்கள் கூடும் இடங்களில் நிறுவ முடிவு:

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, முதல் கட்டமாக, சென்னையில் 75 இடங்களில் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் டிஜிட்டல் பலகைகள் ரூ.6.36 கோடி செலவில் நிறுவப்பட உள்ளன என்றார். போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இவை நிறுவப்படும். இந்த டிஜிட்டல் பலகைகள், காற்றில் உள்ள தினசரி தூசியின் அளவு, காற்றின் வேகம், மழைப்பொழிவு, காற்று அழுத்தம் மற்றும் வெப்பநிலை உள்ளிட்ட 19 வகையான தரவுகளை நிகழ்நேரத்தில் காண்பிக்கும். இந்த டிஜிட்டல் பலகைகள் சுற்றுச்சூழலை மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பதற்கும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: காணும் பொங்கலுங்கு குடும்பத்துடன் வெளியே போறீங்களா.. சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!!

காற்று மாசுபாடுக்கான காரணங்கள்:

சென்னையில் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், திருவொற்றியூர் மற்றும் மணலி உள்ளிட்ட சென்னை மாநகரப் பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளும் நகரத்தின் காற்று மாசுபாட்டிற்கு ஒரு முக்கிய காரணமாகும். இது தவிர, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகள், சாலை அமைக்கும் பணிகள் மற்றும் நிலத்தடி மின்சார கேபிள் பதிக்கும் பணிகள் ஆகியவையும் சாலைகளில் தூசி படிவதற்குக் காரணமாக அமைகின்றன. அதோடு, அதிகரத்துள்ள தனிநபர் வாகன பயன்பாடும் ஒரு முக்கிய காரணமாகும். இவற்றையெல்லாம் குறைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.