Krishnagiri: ஆதாரில் மோசடி.. இறந்த கருவுடன் வாழும் 16 வயது சிறுமி – நடந்தது என்ன?
Krishnagiri Child Marriage: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியின் ஆதார் அட்டையில் வயது திருத்தம் செய்யப்பட்டு குழந்தை திருமணம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. 6 வார கர்ப்பிணியாக இருக்கும் சிறுமியின் கருவில் இதயத் துடிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி ஆதார் மோசடி
கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 19: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு குழந்தை திருமணம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தற்போது அந்த சிறுமி 6 வார கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் தொடர்பாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஆங்காங்கே ஒரு சில நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப்படியான நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமண சட்ட நடவடிக்கையை தவிர்க்க ஆதார் கார்டில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நடந்தது என்ன?
இது தொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரத்தில் வெளியான தகவலின்படி, “சம்பந்தப்பட்ட அந்த சிறுமி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்றும் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் 2025 ஜூலை மாத கடைசி வாரத்தில் நாகமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். மேலும் 2025 ஆகஸ்ட் 4 மற்றும் ஆகஸ்ட் 12 ஆகிய இரண்டு தேதிகளிலும் அந்தச் சிறுமி பரிசோதனை செய்ய சென்ற நிலையில் அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசின் PIMCE எனப்படும் கர்ப்பம் மற்றும் குழந்தை கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு போர்ட்டலில் அந்த சிறுமியை தன்னுடைய விவரங்களை பதிவு செய்யுமாறு தெரிவித்துள்ளனர். இந்த திட்டமானது கர்ப்பிணி பெண்களை முறையாக கண்காணித்து அவர்களின் மகப்பேறு காலத்தை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டிருக்கிறது.
Also Read: ஹைதராபாத் அதிர்ச்சி! 40 வயது ஆண் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த கொடூரம்.. 5 பேர் கைது!
இந்த நிலையில் அந்த போர்ட்டலில் சிறுமி ஆதார் எண் உள்ளீடு செய்யும் போது சிறுமிக்கு 16 வயது என்பதை சுகாதாரத்துறை ஊழியர்கள் கண்டறிந்தனர். ஆனால் அவர் அளித்த ஆதார் அட்டையில் வயது 21 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் குழப்பம் நிலவிய நிலையில் சிறுமியை உடனடியாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு சுகாதாரத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கருவில் இதயத் துடிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது.
இதனால் சிறுமியை காப்பாற்ற அவளுக்கு எம்டிபி எனப்படும் கருவை அகற்றும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அவரது குடும்பத்தினர் மறுத்து அச்சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். அதே சமயம் அன்றைய தினமே ஓசூரில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்திற்கு சிறுமியை குடும்பத்தினர் அழைத்துச் சென்றதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைகள் கண்டறியப்பட்டது.
Also Read: கோவை மாவட்டத்தில் 16 வயது சிறுமி பெற்றெடுத்த குழந்தை: காதலனுக்கு வலைவீச்சு
இது தொடர்பான விசாரணையில் இறங்கி அதிகாரிகளுக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது சில மாதங்களுக்கு முன்பு கெலமங்கலத்தில் உள்ள ஒரு கணினி மையத்தில் வைத்து சிறுமியின் உறவினர் ஒருவர் ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சிறுமி இறந்த நிலையில் உள்ள கருவுடன் 5 நாட்களாக இருப்பதாகவும், அது தொற்றாக மாறி சிறுமியின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குழந்தை திருமணம் என்பதால் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தால் சிக்கிக் கொள்வோம் என அவரது குடும்பத்தினர் தயங்குவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஆதார் அட்டையில் பிறந்த் தேதி மோசடி செய்யப்பட்டு 2 குழந்தை திருமணம் வெளிச்சத்திற்கு வந்தது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.