கனமழை எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விவரம் இதோ
School Leave Update : கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அக்டோபர் 22, 2025 நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதுச்சேரி, காரைக்கால், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் அக்டோபர் 22, 2025 அன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னையில் அக்டோபர் 21, 2025 தொடங்கி, அக்டோபர் 22, 2025 அதிகாலை வரை விடிய விடிய கனமழை தொடரும் என அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதன் படி புதுச்சேரி, காரைக்கால், கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 22, 2025 அன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதே போல அக்டோபர் 22, 2025 அன்று சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சென்னை மக்களே உஷார்.. திறந்துவிடப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி – வெள்ள அபாய எச்சரிக்கை!




இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், அக்டோபர் 21, 2025 இரவு முதல் அக்டோபர் 22, 2025 காலை வரை சென்னையில் விடிய விடிய மழை பெய்யும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஒவ்வொரு கால இடைவெளியிலும் 20 முதல் 40 மி.மீ வரை மழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 22, 2025 அன்று காலைக்குள் சென்னையின் அனைத்து மழையானது 100 மி.மீ அளவைத் தாண்டிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
ராமநாதபுரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக கனமழை பதிவாகியுள்ளது. குறிப்பாக ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளில் அக்டோபர் 20, 2025 இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இதையும் படிக்க : உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தொடங்கியது மழையின் ஆட்டம்.. பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அறுவடைக்கு தயாராகியிருந்த நெற்பயிற்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர். தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு வந்த மக்கள் மீண்டும் சென்னை செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.