தீபாவளி விற்பனை – ரூ.6.05 லட்சம் கோடிக்கு வியாபாரம் – இந்தியா புதிய வரலாற்று சாதனை
Diwali Sale : ஜிஎஸ்டி வரி விகிதம் குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இந்தியாவில் ரூ.6.05 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது. மேலும் மக்கள் இந்த ஆண்டு இந்திய பொருட்களையே அதிகம் வாங்கியுள்ளனர். இது புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது.
சென்னை, அக்டோபர் 22 : இந்த ஆண்டின் தீபாவளி (Diwali) பண்டிகை இந்திய வர்த்தக வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. மொத்த விற்பனை ரூ.6.05 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளதாக இந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் (CAIT) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பொருட்களின் விற்பனை ரூ.5.40 லட்சம் கோடி ஆகவும், சேவைத் துறையில் ரூ.65,000 கோடி எனவும் வணிகம் நடைபெற்றுள்ளது. இது இதுவரை இல்லாத அளவில் தீபாவளியின்போது விற்பனை நடைபெற்றிருக்கிறது. பொதுவாக தீபாவளி நாட்களில் மக்கள் பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு மக்கள் இந்திய பொருட்களை அதிகம் தேர்ந்தெடுத்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஜிஎஸ்டி (GST) விகிதம் குறைப்பு இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சீன பொருட்களின் தேவை குறைந்தது
இதுகுறித்து சிஏஐடி செயலாளர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்ததாவது, “பிரதமர் நரேந்திர மோடி கூறிய வோக்கல் ஃபார் லோக்கல் (Vocal for Local) மக்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக 87% நுகர்வோர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். இதன் காரணமாக சீன பொருட்களின் தேவை கணிசமாகக் குறைந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களின் விற்பனை கடந்த ஆண்டைவிட 25% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.4.25 லட்சம் கோடியாக இருந்த விற்பனை, இந்த ஆண்டு ரூ.6.05 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் சிறு வணிகர்கள் வர்த்தகத்தில் 85 சதவிகித பங்கைக் கொண்டுள்ளனர். இது இந்தியாவின் சிறு வணிகர்களின் எழுத்சியைக் காட்டுகிறது.
இதையும் படிக்க : Silver Price : தீபாவளிக்கு பிறகு விலை குறையும் வெள்ளி?.. வெளியான முக்கிய தகவல்!




துறைவாரியான விற்பனை விவரம்
சிஐஏடி தேசிய தலைவர் பி.சி.பார்தியா வழங்கிய துறைவாரியான விற்பனை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
-
மளிகை பொருட்கள் 12 சதவிகிதம் விற்பனையாகியுள்ளது.
-
தங்கம் மற்றும் நகைகள் 10 சதவிகிதம் விற்பனையாகியுள்ளன.
-
மின்னணு சாதனங்கள் 8 சதவிகிதம் விற்பனையாகியுள்ளன.
-
வீட்டு உபயோகப் பொருட்கள் 7 சதவிகிதம் விற்பனையாகியுள்ளன.
-
ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவை 7 சதவிகிதம் விற்பனையாகியுள்ளன.
-
வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் மரச்சாமான்கள் ஆகியவை தலா 5 சதவிகிதம் விற்பனையாகியுள்ளன.
-
இனிப்பு வகைகள் 5 சதவிகிதம் விற்பனையாகியுள்ளன.
-
இதர பொருட்கள் 19 சதவிகிதம் விற்பனையாகியுள்ளன.
மேலும், சேவைத்துறைகளான பேக்கேஜிங், லாஜிஸ்டிக்ஸ், சுற்றுலா, தங்குமிடம், மனிதவள மேலாண்மை, நிகழ்ச்சி மேலாண்மை ஆகியவற்றின் மூலம் ரூ.65,000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
இதையும் படிக்க : ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.. விலை உயர இதுதான் காரணமா?
அத்தியாவசிய பொருட்கள், காலணி, வீட்டலங்கார பொருட்கள் மற்றும் திடப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு நேரடியாக நுகர்வோரின் வாங்கும் சக்தியை அதிகரித்துள்ளது. சுமார் 72 சதவிகித வணிகர்கள், ஜிஎஸ்டி விகிதங்கள் குறைவால் விற்பனை அதிகரித்ததாக கூறியுள்ளனர். இதனால் விலைகள் குறைந்த நிலையில், மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்க முன்வந்திருக்கின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.