பிரபல பிரியாணி கடையில் கெட்டுப்போன இறைச்சி… பாதிக்கப்பட்டவருக்கு ரூ.35,000 இழப்பீடு
Compensation For Selling Spoiled Beef : சென்னையில் உள்ள பிரபல பிரியாணி கடையில் கெட்டுப்போன இறைச்சியால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் அதற்காக தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு ரூ.35,000 உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, பிப்ரவரி 27 : சென்னை திருவல்லிக்கேணியில் கெட்டுப்போன உணவை விற்பனை செய்த பிரபல பிரியாணி கடைக்கு ரூ.35,000 அபராதம் விதித்து சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் அஹமது முஸ்தபா. இவர் கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருவல்லிக்கேணியில் இயங்கி வரும் பிலால் என்ற பிரியாணி கடையில் ரூ.400 கொடுத்து பீஃப் சவர்மா உள்ளிட்ட உணவுகளை வாங்கினேன். அந்த உணவை சாப்பிட்ட பிறகு தனக்கு வாந்தி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
என்னை பரிசோதித்த மருத்துவர் கெட்டுப்போன உணவை உட்கொண்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றார். இதே போல அந்த கடையில் சாப்பிட்ட மேலும் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர். அந்த கடை விற்பனை செய்த கெட்டுப்போன உணவால் பாதிக்கப்பட்ட எனக்கு ரூ.2,22,000 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையும் படிக்க : தானியங்கி முறையில் கட்டணம்.. டோல்கேட்டுகளில் அதிநவீன கேமரா பொருத்த திட்டம்..
இந்த நிலையில் இந்தப் புகார் மீது விசாரணை நடத்திய சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிரியாணி கடை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இந்த நிலையில் அதற்கு பிரியாணி கடை நிர்வாகத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் கோபிநாத் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய அமர்வு புகார் மனுவை விசாரித்தது. அப்போது நேரில் ஆஜராக அவகாசம் அளிக்கப்பட்டும் பிரியாணி கடை நிர்வாத்தின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.
மேலும் வழக்கில் எதிர்தரப்பில் இருந்து எந்த வித மறுப்போ, விளக்கமோ அளிக்கப்படாத நிலையில் ஆவணங்களின் அடிப்படையில் புகாரை ஏற்றுக்கொண்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், கெட்டுப்போன உணவு விற்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட் நபருக்கு இழப்பீடாக ரூ.30,000 மற்றும் வழக்கு செலவு ரூ.5000 சேர்த்து 9 சதவிகித வட்டியுடன் அளிக்க வேண்டும் என உணவக நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.
இதையும் படிக்க : படிக்காமல் நண்பர்களுடன் சுற்றி வந்த 8ம் வகுப்பு மாணவன்.. பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு..
சென்னையில் கெட்டுப்போன உணவுகள் விற்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையாகி வருகிறது. புகார் எழுந்ததும் நடவடிக்கை எடுக்காமல் அவ்வப்போது உணவகங்களில் உள்ள உணவுகளின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கிறது.


