திமுக காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தமானது.. 28 இடங்கள் ஒதுக்கீடு..
DMK AND CONGRESS Alliance: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்றும், நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 4, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக திமுக–காங்கிரஸ் இடையே நீடித்து வந்த தொகுதி பங்கீடு இழுபடி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லிம் லீக், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறி:
இதில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பல நாட்களாக தொகுதி பங்கீடு குறித்த இழுபறி இருந்து வந்தது. அதாவது, காங்கிரஸ் தரப்பில் 35 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில், திமுக தரப்பில் 25 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவிக்கையில், “அனைத்து தரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என குறிப்பிட்டிருந்தார்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு கேட்கப்பட்ட இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றால், அது தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கக்கூடும் என்ற யூகங்களும் வெளியானது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
மேலும் படிக்க: 50-50.. அதிமுக VS திமுக.. கடும் போட்டியில் தி. நகர் சட்டமன்ற தொகுதி..
இந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ்–திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன. நேற்று மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் ப. சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் வந்தவுடன் கூட்டணி தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும்” என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள்:
இந்த நிலையில், திமுக–காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. அதன்படி, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களுடன் தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
அதன் அடிப்படையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்றும், நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.