“அண்ணன் வைகோவுக்கு 82 வயதா அல்லது 28 வயதா?”.. சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு
போதைப் பொருள் ஒலிப்பு என்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு, கலைத் துறையை சேர்ந்தோர் பொறுப்புணர்வோடு படைப்புகளை தர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதோடு, தமிழகத்தின் குறுக்கும், நெடுக்குமாக தனது காலடி படாத இடமே இல்லை என்று சொல்லும் வண்ணம் நடந்தவர் அண்ணன் வைகோ என்றும் பேசியுள்ளார்.

வைகோவின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருச்சி, ஜனவரி 02: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் இன்று காலை விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். ஜனவரி 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை திருச்சியில் இருந்து மதுரை வரை 10 நாட்கள் வைகோ சமத்துவ நடைபயணம் செல்கிறார். அவரது நடைபயணம் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று காலை திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்றது. முதல்வர் வருகையையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க: பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்குவது உறுதி?கசிந்தது முக்கிய தகவல்!
கவனத்தை ஈர்த்த முதல்வரின் உரை:
இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஆற்றிய உரை பெரிதும் கவனம் பெற்றது. குறிப்பாக வைகோவின் வயது குறித்தும், நடைபயணத்திற்கான இளைஞர்களை தேர்வு செய்த விதம் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி, விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் குறுக்கும், நெடுக்குமாக தனது காலடி படாத இடமே இல்லை என்று சொல்லும் வண்ணம் நடந்தவர் அண்ணன் வைகோ.
வைகோவுக்கு 82 வயதா அல்லது 28 வயதா?
வைகோ அவர்கள் திராவிட இயக்கத்தில் கலைஞரிடம் பாடம் கற்றவர். இவரது மன உறுதியையும், உடல் வலிமையையும் பார்க்கும் போது 82 வயதா, இல்லை 28 வயதா என்று ஆச்சரியம் தோன்றுகிறது. ஒரு இளைஞருக்கு உரிய வேகத்தையும், உத்வேகத்தையும் அவரிடம் பார்க்க முடிகிறது. கலைஞர் கருணாநிதி உடனிருந்து அரசியல் பாடம் கொண்டவர் வைகோ. மதுரையில் இருந்து திருச்சிக்கு நீதி கேட்டு கலைஞர் நடைபயணம் மேற்கொண்ட போது, அவர் கால் கொப்பளிக்க நடந்து சென்ற போது, கூடவே நடந்தவர் தான் வைகோ.
இளைஞர்களை தேர்வு செய்த வைகோ:
இந்த நடைபயணத்திற்கு உடன் வரும் இளைஞர்களை தாமே முன்னின்று தேர்வு செய்திருக்கிறார் வைகோ. எப்படி தெரியுமா? பெற்றோர்களிடம் உரிய அனுமதி பெற்றிருக்கிறார்களா? இந்த பயணத்தால் அவர்களின் கல்லூரி படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கிறதா? உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா? மன உறுதியுடன் இருக்கிறார்களா? எனப் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து தேர்வு செய்துள்ளார்.
மேலும் படிக்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு.. நாளைக்குள் டோக்கன்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.. நியாய விலை கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?
கலைத்துறையினருக்கு முதல்வர் வேண்டுகோள்:
போதைப் பொருள் ஒலிப்பு என்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு, கலைத் துறையை சேர்ந்தோர் பொறுப்புணர்வோடு படைப்புகளை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், அதன் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது என்றார். மேலும், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருளை ஒழிக்க, அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவு பலன் கிடைத்துள்ளது என்றார்.