டிட்வா புயல் பாதிப்பு.. உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு..

Ditwah Cyclone Damage: டிசம்பர் 1, 2025 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையாலும் குறிப்பாக டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

டிட்வா புயல் பாதிப்பு.. உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு..

கோப்பு புகைப்படம்

Published: 

01 Dec 2025 17:19 PM

 IST

சென்னை, டிசம்பர் 1, 2025: வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டப் பகுதிகளில் கடுமையான மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கான இழப்பீடுகளை விரைந்து வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையிலிருந்து விலகி வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தை நோக்கி வந்தது. அப்போது டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை கொட்டியது.

டிட்வா புயலால் ஸ்தம்பித்த டெல்டா:

குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழைப்பொழிவு பதிவாகியது. இடைவிடாமல் இரண்டு நாட்கள் பெய்த மழையின் காரணமாக அங்கிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க: 11 நாட்கள் காட்சி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்:

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றன. மேலும் நவம்பர் 28 அன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்குச் சென்று, அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 1, 2025 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையாலும் குறிப்பாக டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் படிக்க: மழைக்கால பாதிப்பை தடுக்க கிண்டி ரேஸ் கிளப்பில் 4 குளங்கள்.. உயர்நீதிமன்றம் உத்தரவு..

இந்தக் கூட்டத்தில், தற்போது பெய்து வரும் மழையால் வேளாண் பயிர்கள் — குறிப்பாக நெற்பயிர்கள், மிளகு பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் — சேதமடைந்துள்ளதால், உடனடியாக கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

அக்டோபர் மாத மழை பாதிப்புக்கு நிவாரணம்:

அக்டோபர் மாதத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கான கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. 33 சதவீதத்திற்கும் மேற்பட்ட சேதத்திற்குள்ளான 4,235 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கும், 345 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

டிட்வா புயல் பாதிப்பு – விரைந்து நிவாரணம் வழங்க உத்தரவு:


டிட்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் பிற வீடுகளில் ஏற்பட்ட சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் உள்ளிட்ட அனைத்திற்கும் இழப்பு பட்டியலை தயாரித்து விரைந்து வழங்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள 39 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக வழங்கி, தேவையான காலம் வரை இந்த பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூரியன் மறைந்த பிறகு ஏன் நகம் வெட்டக்கூடாது?
ஒரே காரில் வலம் வந்த தோனி - கோலி கூட்டணி - வைரலாகும் வீடியோ
அவரை அடிக்க வேண்டும் என தோன்றியது... ரஹ்மான் குறித்து சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த ராம் கோபால் வர்மா
‘உருவானது கொசு தொழிற்சாலை’.. டெங்குக்கு எதிராக மக்களை பாதுகாக்க புதிய திட்டம்!!