Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மழைக்கால பாதிப்பை தடுக்க கிண்டி ரேஸ் கிளப்பில் 4 குளங்கள்.. உயர்நீதிமன்றம் உத்தரவு..

Guindy Race Course: சென்னை போன்ற பெரு நகரங்களில் நிலம் என்பது மிகவும் பற்றாக்குறையாக உள்ள நிலையில், அரசு நிலத்தை குறிப்பிட்ட தனிநபர்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பது போலாகும் எனவும் கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

மழைக்கால பாதிப்பை தடுக்க கிண்டி ரேஸ் கிளப்பில் 4 குளங்கள்.. உயர்நீதிமன்றம் உத்தரவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Dec 2025 15:25 PM IST

சென்னை, டிசம்பர் 1, 2025: சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் நிலத்தில், மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பசுமைவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீரை சேமிக்க நான்கு குளங்கள் என மழைநீர் சேகரிப்பு திட்டமும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

வழக்கு பின்னணி என்ன?

இந்த திட்டங்களை அமல்படுத்துவதை எதிர்த்தும், குத்தகையை ரத்து செய்து, நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்ததை எதிர்த்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

மேலும் படிக்க: மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்.. கோவையில் பயங்கரம்!!

கிண்டி ரேஸ் கிளப்பில் 4 குளங்கள்:

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் முகமது ஷபிக் அமர்வு, சென்னை வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக, மக்களின் நலன் கருதி, கிண்டி ரேஸ் கிளப் இடத்தில் நான்கு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறி, கிண்டி ரேஸ் கிளப்புக்கு சொந்தமான இடத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

மேலும் படிக்க: உஷார் மக்களே.. சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்.. பிற மாவட்டங்களில் மழை இருக்குமா?

கடந்த 2015 ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்களையும், உடைமை சேதங்களையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கும் போது இது போன்ற திட்டங்கள் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம் சுற்றுச்சூழல் சம நிலை ஏற்படுவதோடு, காற்று மாசுவை குறைக்க இயலும் எனவும் காற்று மாசு என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை மட்டுல்ல எனவும் பொதுமக்களின் உடல் நலன் சார்ந்த பிரச்னை எனவும் உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள்:

சென்னை போன்ற பெரு நகரங்களில் நிலம் என்பது மிகவும் பற்றாக்குறையாக உள்ள நிலையில், அரசு நிலத்தை குறிப்பிட்ட தனிநபர்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பது போலாகும் எனவும் கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.