உருமாறிய வைரஸ்.. சென்னையில் அதிகரிக்கும் நாள்பட்ட காய்ச்சல், இருமல் பாதிப்பு.. ஷாக் தகவல்!!
Mutated virus: நீண்ட நாட்கள் சளி, இருமல் இருப்பதற்கான காரணம் குறித்து மருத்துவர் கூறும்போது, இந்த வைரஸ்கள் உருமாறி வலுவாகி வருவதாக தெரிகிறது. சரியான சிகிச்சை எடுக்காமல் தன்னிச்சையாக மருந்து எடுத்துக் கொள்வதால் நோய் நீண்ட நாட்கள் நீடிக்கிறது என்று அவர் கூறினார்.
சென்னை, ஜனவரி 15: சென்னையில் கடந்த சில வாரங்களாக சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகரித்து வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவிலான மக்கள் சிகிச்சை பெற வந்த வண்ணம் இருந்தனர். சென்னையில் மழை பெய்து ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், திடீரென காய்ச்சல் பரவி வருவது ஒருவித அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி வந்தது. ஏனெனில், இந்த காய்ச்சல் உடனே வந்துச் செல்லக் கூடியதாக இல்லாமல் இருந்தது தான் மக்களிடையே பயத்திற்கு முக்கிய காரணம். அதாவது, இந்த காய்ச்சல், சளி அல்லது இருமல் பாதிப்பு ஏற்பட்டால், நீண்ட நாட்களாக அதனால் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: புதிய காருக்கு திருஷ்டி சுற்றிய குடும்பம்.. எலுமிச்சையால் வந்த சிக்கல்.. பரபரப்பு சம்பவம்!
வைரஸ் தாக்கம் அதிகரிப்பு:
மழைக்காலம் முடிந்தாலும், குளிர் கால நிலையும், வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றமும் காரணமாக பல்வேறு வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக சென்னையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலி ஆகியவை தாக்கி வருவதாக அவர் கூறினார். அதன்படி, சென்னையில் தற்போது அதிகம் சுற்றிப் பரப்பப்படும் வைரஸ்களளாக இன்ஃப்ளூயன்சா (Influenza), ஆர்.எஸ்.வி (RSV) – நுரையீரலை அதிகமாக பாதிக்கக்கூடிய வைரஸ், அடினோ வைரஸ் (Adenovirus) ஆகிய வைரஸ்கள் உள்ளன. இந்த வைரஸ்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக மருத்துவர் கூறினார்.




நீண்ட நாட்கள் சளி, இருமல்:
நீண்ட நாட்கள் சளி, இருமல் இருப்பதற்கான காரணம் குறித்து மருத்துவர் கூறும்போது, இந்த வைரஸ்கள் உருமாறி வலுவாகி வருவதாக தெரிகிறது. சரியான சிகிச்சை எடுக்காமல் தன்னிச்சையாக மருந்து எடுத்துக் கொள்வதால் நோய் நீண்ட நாட்கள் நீடிக்கிறது என்றார். இதனால், காய்ச்சல், இருமல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்தால் மிக தீவிரமான வைரஸ்களையும் கட்டுப்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க : தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் உயிரிழப்பு – பரபரப்பு தகவல்
நோய் பரவல் குறித்து ஆய்வு:
தற்போது நோய்க்கான காரணம் என்ன என்பதைத் தெளிவாக கண்டறிய, பாதிக்கப்பட்டவர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சளி மாதிரிகள் அரசு சுகாதாரத்துறையால் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. நிலைமை கவலைக்கிடமாக இல்லை. அதேபோல், பெரிய அளவில் ஆபத்து எதுவும் இல்லை. ஆனால், காய்ச்சல் உள்ளிட்ட எந்த தொந்தரவு வந்தாலும் தாமதிக்காமல் சிகிச்சை பெறுவது அவசியம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.