புதிய காருக்கு திருஷ்டி சுற்றிய குடும்பம்.. எலுமிச்சையால் வந்த சிக்கல்.. பரபரப்பு சம்பவம்!
Coimbatore New Car Lemon Issue | கோயம்புத்தூரில் புதியதாக கார் வாங்கி குடும்பம் ஒன்று அந்த காருக்கு திருஷ்டி சுற்றிய நிலையில், அந்த எலுமிச்சை பழத்தை பக்கத்து வீட்டிற்கு அருகே வீசியுள்ளது. இதன் காரணமாக இரு குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.
கோயம்புத்தூர், ஜனவரி 15 : கோயம்புத்தூர் (Coimbatore) மாவட்டம், காரமடை அருகே உள்ள பகுதியில் ஒரு குடும்பத்தினர் தாங்கள் வாங்கிய புதிய காருக்கு திருஷ்டி கழித்துள்ளனர். எலுமிச்சை பழத்தை வைத்து திருஷ்டி கழித்த அவர்கள், அதனை தங்களது பக்கத்து வீட்டின் அருகே வீசியுள்ளனர். இதன் காரணமாக எழுந்த வாக்குவாதம், இரு குடும்பத்தினர் இடியே கைகலப்பில் முடிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதிய காருக்கு திருஷ்டி சுற்றிய போது எலுமிச்சையால் வந்த சிக்கல்
ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான பழக்க, வழக்கங்கள் மற்றும் கலாச்சாரம் இருக்கும். அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவற்றை பின்பற்றி நடப்பர். அந்த வகையில், தமிழகத்தில் புதியதாக கார், இருசக்கர வாகனம், லாரி என எந்த வகை வாகனங்களை வாங்கினாலும் அவற்றின் சக்கரங்களின் எலுமிச்சை பழங்களை வைத்து ஏற்றுவது, பூசணிக்காயை சுற்றி ஆரத்தி எடுப்பது உள்ளிட்டவற்றை செய்வர்.
இதையும் படிங்க : சர்க்கரை ஆலை தொட்டியில் விழுந்து 2 தொழிலாளர்கள் பலி – சிவகங்கை அருகே சோகம்
கைகலப்பை உருவாக்கிய எலுமிச்சை விவகாரம்
இந்த நிலையில், கோயம்புத்தூரை சேர்ந்த குடும்பம் ஒன்று தாங்கள் புதியதாக வாங்கிய காருக்கு பூஜை செய்து எலுமிச்சை பழத்தை சக்கரங்களில் வைத்து ஏற்றியுள்ளது. அப்போது திருஷ்டி சுற்றப்பட்ட பழத்தை அந்த குடும்பத்தினர் பக்கத்து வீட்டின் அருகே வீசிய நிலையில், அது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் இரு குடும்பத்தார் மத்தியில் கைகலப்பை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் உயிரிழப்பு – பரபரப்பு தகவல்
பொதுவாக திருஷ்டி சுற்றப்பட்ட பூசணிக்காய், எலுமிச்சை ஆகியவற்றை பொதுமக்கள் தங்களது கண்களில் கூட பார்க்க விரும்ப மாட்டார்கள். இந்த நிலையில், திருஷ்டி சுற்றப்பட்ட எலுமிச்சை பழத்தை தங்களது வீட்டின் அருகே வீசியதன் காரணமாக ஆத்திரமடைந்த குடும்பத்தினர் கைகலப்பு வரை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகும் நிலையில், பலரும் இந்த சம்பவம் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.