சென்னையில் இரவு முழுவதும் நீடித்த மழை.. பிற மாவட்டங்களில் எப்படி?

Tamil Nadu Weather Update: வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, செப்டம்பர் 11, 2025 தேதியான இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரவு முழுவதும் நீடித்த மழை.. பிற மாவட்டங்களில் எப்படி?

கோப்பு புகைப்படம்

Published: 

11 Sep 2025 06:45 AM

 IST

வானிலை நிலவரம், செப்டம்பர் 11, 2025: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவிய நிலையில், 10ஆம் தேதி மாலை பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவானது. குறிப்பாக, சென்னை மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல், தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, செப்டம்பர் 11, 2025 தேதியான இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தரைக்காற்று, இடி – மின்னலுடன் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் மிதமான மழை:

செப்டம்பர் 13 முதல் 16 வரை சில பகுதிகளில் மிதமான மழை பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், சில இடங்களில் வெப்ப சலனம் மற்றும் காற்றின் வேக மாற்றம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சேலத்தை அதிர வைத்த பெண்.. திண்டுக்கல் வியாபாரிடம் ரூ.10 கோடி மோசடி!

காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் மழை – பிரதீப் ஜான்:


இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், கடந்த மூன்று நாட்களாக உள்தமிழகம் மற்றும் தென் மிழகம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வருவதாகவும், இன்றும் அதே நிலை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், காற்றின் வேக மாற்றம் காரணமாக சென்னையிலும் மழை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: கராத்தே கிளாஸ் வந்த மாணவிகளின் அம்மா டார்கெட்.. சிக்கிய மாஸ்டர்!

அதேபோல், செப்டம்பர் 10, 2025 முதல் செப்டம்பர் 11, 2025 காலை வரை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். சென்னையில் வறண்ட வானிலை நிலவிய நிலையில், நகரின் பல பகுதிகளில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பதிவானது. இதனால் வெப்பநிலையின் தாக்கம் சற்றே குறைவாகக் காணப்படுகிறது.