பாம்பன் பாலத்தில் பயணம்.. வரப்போகும் வந்தே பாரத் ரயில் சேவை? எப்போது தெரியுமா?
Pamban Bridge : சென்னை ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் சேவைக்காக பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏற்கனவே, 28 ரயில்கள் பாம்பன் பாலம் வழியாக இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது, சென்னை ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ராமேஸ்வரம், மே 02: சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை பாம்பன் பாலம் (Pamban Bridge) வழியாக விரைவில் வந்தே பாரத் ரயில் (Vande Bharat Express) இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாம்பன் பாலத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்ட பிரமாண்ட புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி 2025 ஏப்ரல் 6ஆம் திறந்து வைத்தார். இந்தியாவின் முதல் செங்குத்து பாலம் இதுவே ஆகும். நவீனமாக கட்டப்பட்ட இந்த பாலத்தில், கப்பல்கள் செல்லும் நேரத்தில், செங்குத்தாக திறக்கும் தன்மை கொண்டது.
பாம்பன் பாலத்தில் பயணம்
2.07 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தை, சரக்கு கப்பல்கள் கடக்கும் வகையில், கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் ரயில்கள் செல்ல முடியும். இந்த பாலத்தில் தற்போது 28 ரயில்கள் சென்று வருகிறது. சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி சேவை இருக்கிறது.
இந்த ரயில்கள் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து சென்று வருகின்றன. இந்த நிலையில், சென்னை ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாம்பன் பாலத்தில் வந்தே பாரத் ரயில் பயன்பாட்டிறற்கு வந்தால், சுற்றுலா துறை மேலும் மேம்படுத்தும் விதமாக இருக்கும்.
சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்கப்படக் கூடும். சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயிலில் எட்டி பெட்டிகள் இருக்கும். 1 எக்சிகியூட்டிவ் ஏசி, மற்றும் 7 ஏசி சேர் கார் பெட்டிகள் இருக்கும். இதற்கான கட்டணம், ரூ.1,400 முதல் ரூ.2,400 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
வரப்போகும் வந்தே பாரத் ரயில் சேவை
சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்து அதிகாலை 05:50 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2:30 மணிக்கு ராமேஸ்வரத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 3.00 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தடையும் என கூறப்படுகிறது.
சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம், செங்கல்பட்டு சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி, மானாமதுரை சந்திப்பு, மண்டபம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், வந்தே பாரத் ரயில் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் பல்வேறு ரயில்கள் மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
அதில், ஒன்று வந்தே பாரத் ரயில். இந்த வந்தே பாரத் ரயில்கள் நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இது பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.