போராட்டம் தொடர்ந்தால் கைது நடவடிக்கை.. தூய்மை பணியாளர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை..
Sanitization Workers Protest: சென்னை ரிப்பன் மாளிகையில், தூய்மை பணியாளர் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து 8வது நாளாக போராடி வருகின்றனர், இந்நிலையில் போராட்டம் தொடர்ந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை தரப்பில் தூய்மை பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஆகஸ்ட் 8, 2025: பணி நிரந்தரம் கோரி சென்னையில் இருக்கக்கூடிய தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு வி க நகர், அம்பத்தூர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் இருக்கக்கூடிய அனைத்து மண்டலங்களிலும் என்.யு.எல்.எம் என்ற திட்டத்திற்கு ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு சில மண்டலங்களில் மாநகராட்சியின் நிரந்தர பணியாளர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இரு தரப்பினரும் தூய்மைப் பணியில் அந்தந்த மண்டலத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நிரந்தர பணியாளர்களையும் தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8வது நாளாக தொடரும் போராட்டம்:
தனியார் மயமாக்கினால் தங்களது பணி நிரந்தரம் பாதிக்கப்படும் என்றும் ஊதியம் குறையும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் தனியார்மயமாக்க கூடாது எனவும் குறிப்பிட்டு தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தொடர்ந்து எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம் கோரி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் சென்னை ரிப்பன் மாளிகை வாசலில் டெண்டுகள் அமைத்து அங்கேயே தங்கி இருந்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: தென்காசியில் அதிர்ச்சி.. கரடி தாக்கி 3 பேர் பெண்கள் படுகாயம்!
இது தொடர்பாக உழைப்போர் உரிமை இயக்கத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் தனியாரை அனுமதிக்க கூடாது என கோரிக்கை முன்வைக்கப்பட்ட வரும் நிலையில், அமைச்சர் கே.என் நேரு, மேயர், பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் சமரசம் எட்டப்படாத நிலையில் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
தெருக்களில் வழியும் குப்பைகள்:
மேலும் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அல்லாமல் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலைகளிலும் குப்பைகள் நிரம்பி வழிந்து வருகிறது. ஒரு வார காலமாக குப்பைகள் அகற்றப்படாத நிலையில் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் இந்த குப்பைகளின் மூலம் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாலும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: சிவகங்கையில் வினோதம்.. ஒருவர் மட்டுமே வாழும் நாட்டாகுடி கிராமம்.. என்ன பிரச்னை?
போராட்டம் தொடர்ந்தால் கைது நடவடிக்கை:
இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை தொடர்வதால் பொது அமைதி, பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படும் எனவும், உத்தரவை மீறி போராட்டத்தை தொடர்ந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.