அமைச்சர் கே.என். நேருக்கு எதிரான புகார்.. வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
Chennai High Court On Minister K,N. Nehru: இந்த உத்தரவு நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது விசாரணை தீவிரமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 20, 2026: நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமன முறைகேடு மற்றும் டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, அமலாக்கத் துறை (ED) வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகத் துறையில் பணிநியமனங்களுக்கு லஞ்சம் பெறப்பட்டதாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு சேகரித்த ஆதாரங்களை தமிழக டிஜிபிக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்திருந்தது.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வு விசாரித்தது.
மேலும் படிக்க: விதியை மீறும் வாகனங்களுக்கு ரூ.25,000 ஸ்பாட் ஃபைன்.. சென்னை மாநகராட்சி அதிரடி..
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்
-
அமலாக்கத் துறை தரப்பில், வேறு ஒரு வழக்கின் விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட முக்கிய ஆதாரங்கள் டிஜிபிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
-
தமிழக அரசு தரப்பில், அமலாக்கத் துறையின் கடிதம் பெறப்பட்டு, அது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
-
நகராட்சி நிர்வாகத் துறையில் நியமன முறைகேடு மற்றும் டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களில் “முகாந்திரம்” (Prima Facie) இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
-
அதனால், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
அமலாக்கத் துறை போதுமான ஆதாரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதால், ஆரம்பகட்ட முன்விசாரணை (Preliminary Enquiry) தேவையில்லை எனவும் தெரிவித்தனர்.
-
அமலாக்கத் துறை அளித்த கடிதங்களில் உள்ள தகவல்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தகுந்தவையாக உள்ளன எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மேலும், ஆதிநாராயணன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே சமயம், வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு சட்டப்படி முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்த உத்தரவு நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது விசாரணை தீவிரமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.