சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பரிவர்த்தனை ரத்து.. பாஸ்டேக் சிக்கலால் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்!
விபத்து அல்லது பழுது காரணமாக முன்புறக் கண்ணாடி மாற்றப்பட்ட பேருந்துகளில், புதிய பாஸ்ட்டாக் ஒட்டப்பட்டிருந்தாலும் அவை சரியாக ஸ்கேன் ஆகாத நிலை உள்ளது. அருகிலுள்ள ஊர்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளிலும் பாஸ்ட்டாக் இருப்பு இல்லாததால் அவை சுங்கச்சாவடியைக் கடக்க முடியாமல் நிற்கின்றன.

பாஸ்டேக்
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ரொக்கப் பணமாகச் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. சுங்கச்சாவடிகளில் இனி பாஸ்டேக் (FASTag) மூலம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், ரொக்கப் பரிவர்த்தனை கிடையாது என்றும் கடந்த 10 நாட்களாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. அந்தவகையில், இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்ததால், பாஸ்டேக் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தும் வாகனங்கள் மட்டுமே சுங்கச்சாவடியைக் கடக்க அனுமதிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: உங்கள் குழந்தையின் கல்லூரி செலவுக்கு ரூ.1 கோடி உருவாக்க வேண்டுமா?.. இப்படி முதலீடு செய்யுங்கள்!
பாதிக்கப்பட்ட அரசுப் பேருந்துகள்:
தனியார் வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் பெரும்பாலானவை பாஸ்டேக் வசதியைக் கொண்டுள்ளன. ஆனால், அரசுப் பேருந்துகளில் போதிய இருப்புத் தொகை இல்லாத காரணத்தால், மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் அதிகாலை முதல் அரசுப் பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
முக்கியப் பிரச்சனைகள்:
அரசுப் பேருந்துகள் எதிர்கொள்ளும் முக்கியச் சிக்கல்கள் பின்வருமாறு, வழக்கமான பேருந்துகள் பழுதடையும் போது இயக்கப்படும் மாற்றுப் பேருந்துகளில் பாஸ்டேக் வசதி சரியாக இருப்பதில்லை. முன்பு பாஸ்டேக் வேலை செய்யாத நேரங்களில் ஓட்டுநர்கள் ரொக்கமாகப் பணம் செலுத்திச் செல்ல முடிந்தது. ஆனால் தற்போது சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் பெறுவது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால், பாஸ்டேக் இல்லாத அல்லது அதில் பணம் இல்லாத பேருந்துகள் அங்கேயே நிறுத்தப்படும் சூழல் ஏற்படுகிறது.
ஸ்கேன் செய்வதில் சிக்கல்:
விபத்து அல்லது பழுது காரணமாக முன்புறக் கண்ணாடி மாற்றப்பட்ட பேருந்துகளில், புதிய பாஸ்ட்டாக் ஒட்டப்பட்டிருந்தாலும் அவை சரியாக ஸ்கேன் ஆகாத நிலை உள்ளது. அருகிலுள்ள ஊர்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளிலும் பாஸ்ட்டாக் இருப்பு இல்லாததால் அவை சுங்கச்சாவடியைக் கடக்க முடியாமல் நிற்கின்றன.
கூடுதல் கட்டண விவரங்கள்:
பாஸ்டேக் இல்லாத அல்லது அதில் போதிய இருப்பு இல்லாத வாகனங்களுக்குக் கீழே உள்ளவாறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. UPI மூலம் செலுத்தினால் வழக்கமான சுங்கக் கட்டணத்துடன் 25% கூடுதல் கட்டணம் (அதாவது 1.25 மடங்கு) வசூலிக்கப்படும். உதாரணமாக, ₹80 கட்டணம் உள்ள இடத்தில் ₹100 செலுத்த வேண்டியிருக்கும். சில விதிவிலக்கான நேரங்களில் ரொக்கம் ஏற்கப்பட்டால், வழக்கமான கட்டணத்தைப் போல 2 மடங்கு வசூலிக்கப்படும். பாஸ்டேக் Blacklistல் இருந்தாலோ அல்லது செயலிழந்த நிலையில் இருந்தாலோ இதே போன்ற அபராதக் கட்டணங்கள் விதிக்கப்படும்.
பயணிகள் அவதி:
சுங்கச்சாவடிகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் அடுத்த பேருந்துகளுக்கு மாற முடியாமலும், குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர்கள் ரொக்கப் பணத்தை ஏற்கக் கண்டிப்பாக மறுத்து வருவதால், இந்தச் சிக்கல் நீடித்து வருகிறது.
இதையும் படிக்க: ஆன்லைன் பரிவர்த்தனையின்போது ரூ.1 எடுக்கப்படுவது ஏன்? பாதுகாப்பானதா?
போக்குவரத்து நெரிசல் குறையும்:
இந்த அதிரடி மாற்றத்தால் நாடு முழுவதும் உள்ள சுமார் 1,150க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், சுமார் 3% வாகனங்கள் இன்றும் பாஸ்டேக் இன்றி அல்லது காலாவதியான அட்டைகளுடன் வருவதால், இந்த 25% கூடுதல் கட்டணம் மற்றும் அபராதங்கள் அந்த வாகன உரிமையாளர்களைப் பாதிக்கும்.