பெரும் கடன்.. மனைவி, மகன்கள் கொலை.. தொழிலதிபர் தற்கொலை
Chengalpattu Tragedy News: சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் சிசிடிவி கேமரா விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த சிரஞ்சீவி என்ற நபர், கடன் சுமையால் மனைவி மற்றும் இரு மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொண்ட தொழிலதிபர்
சென்னை, அக்டோபர் 23: சென்னையில் மனைவி மற்றும் 2 மகன்களை கொன்று விட்டு தொழிலதிபர் ஒருவர் தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் குடியிருப்பு ஒன்று சிரஞ்சீவி தாமோதர குப்தா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 15 வயதில் ரித்விக் ஹர்ஷத் மற்றும் 11 வயதில் தத்விக் ஹர்ஷத் என இரு மகன்களும் உள்ளனர். சென்னை அண்ணா சாலை ரிச் ஸ்ட்ரீட் பகுதியில் சிரஞ்சீவி தாமோதரகுப்தா சிசிடிவி கேமரா விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட சிரஞ்சீவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.
தொழிலதிபர் என்பதால் தனது கடையை விரிவுபடுத்துவதற்காக கொரோனோ காலகட்டத்திற்கு பிறகு பல கோடி கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் உரிய காலத்தில் அதனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடன் கொடுத்த நபர்கள் சிரஞ்சீவியை பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் தனது கடையில் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியவர்களும் சரியாக பணத்தை திரும்ப கொடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
Also Read: தொல்லை கொடுத்த மனைவி.. திருமணமான 5 மாதங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை!
கடன் நெருக்கடி ஏற்பட்டதால் சிரஞ்சீவி கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். மேலும் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் நேரடியாக மனைவி ரேவதிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடன் தொல்லை காரணமாக தீபாவளி பண்டிகையையும் குடும்பத்தினர் கொண்டாடாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சிரஞ்சீவி சேலத்தில் வசித்து வரும் தனது மாமா முரளி என்பவரின் வங்கி கணக்குக்கு ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். ஏன் அந்த நேரத்தில் இவ்வளவு பணம் அனுப்பி இருக்கிறார் என புரியாமல் குழம்பிய முரளி வெகுநேரமாக தொடர்பு கொள்ள முயன்றும் சிரஞ்சீவி போனை எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து முரளி சாலிகிராமத்தில் வசித்து வரும் சிரஞ்சீவியின் மனைவி ரேவதியின் தம்பி சாய் கிருஷ்ணாவுக்கு போன் செய்து வீட்டிற்கு நேரில் சென்று பார்த்து வர சொல்லியுள்ளார்.
அதன்படி சாய் கிருஷ்ணாவும் ரேவதி வீட்டிற்கு காலை 7 மணிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு வெகுநேரமாக தட்டியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் ஒருவித பதட்டத்துடன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் ரேவதி மற்றும் இரண்டு மகன்கள் பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடியபடி இறந்து கிடந்தனர்.
Also Read: பாலியல் துன்புறுத்தல் ;. ஐடி ஊழியர் தற்கொலை ; வெளியான இன்ஸ்டாகிராம் பதிவு
அதே சமயம் மற்றொரு அறையில் உள்ள பாத்ரூமில் கை கால்களை கட்டிய நிலையில் கத்தியால் கை மணிக்கட்டு மற்றும் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் சிரஞ்சீவி இறந்து கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாய் கிருஷ்ணா உடனடியாக நீலாங்கரை போலீசருக்கு தகவல் அளித்தார். அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் சிரஞ்சீவி, ரேவதி மற்றும் இரண்டு மகன்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வீடு முழுவதும் சோதனை நடத்தியதில் கடிதம் ஒன்று சிக்கியது. அதனைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ‘தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் எதையும் திருப்பி செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக நானும் எனது குடும்பத்தினரும் உயிரை மாய்த்துக் கொள்கிறோம். எங்களது இழப்பிற்கு யாரும் பொறுப்பல்ல என தெரிவித்துக் கொள்கிறேன். தனது தற்கொலைக்கு பிறகு கடன் கொடுத்த நபர்களால் மனைவி மற்றும் மகன்களுக்கு ஆபத்து வரும் என்பதால் அனைவரும் இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அந்த கடிதத்தில் ரேவதியும் கையெழுத்து போட்டு இருந்தது போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை முடிவுக்கு ரேவதியும் சம்மதித்து இருந்தால் மகன்களை கொன்றுவிட்டு இருவரும் வேறு வழியில் உயிரை மாய்த்து இருக்கலாம். ஆனால் அவரும் பிளாஸ்டிக் கவரால் முகம் மூடியபடி இறந்து கிடந்துள்ளார்.
ஒருவேளை சிரஞ்சீவி மனைவியை வலுக்கட்டாயமாக கொலை செய்துவிட்டு பின்னர் மகன்களை கொன்று இருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் குடும்பத்தினரை நம்ப வைக்க மனைவி ரேவதியின் கையெழுத்தை சிரஞ்சீவியை கடிதத்தில் போட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.