ரெட் அலர்ட் எச்சரிக்கை.. நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்..
Nilgiris Tourist Spot: நீலகிரி மாவட்டத்தில் இன்று (5, ஆகஸ்ட் 2025) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் பயணத்தை திட்டமிட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி, ஆகஸ்ட் 5, 2025: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பதிவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 5 2025 தேதியான இன்று, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்பதன் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 6, 2025 ஆம் தேதியும் இந்த இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் தொடர் கனமழையின் காரணமாக அங்கு இருக்கக்கூடிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்று ஒரு நாள் அதாவது ஆகஸ்ட் 5 2025 தேதியான இன்று ஒரு நாள் மட்டும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் தொடர் கனமழை:
தென்மேற்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் கனமழை பதிவாகி வருகிறது. குறிப்பாக பார்சன் வேலி, அவலாஞ்சி, மேல் பவானி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்படுகிறது. அதேபோல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்.. பிற மாவட்டங்களில் எப்படி?
இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு இந்த கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 5 2025 தேதியான இன்று மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுற்றுலா தலங்கள் மூடல்:
அதேபோல் நீலகிரியில் சுற்றுலா தளங்களை காண்பதற்காக பெரும்பாலான மக்கள் வருகை தருவது வழக்கம். ஆனால் தொடர் மழையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 5 2025-ம் தேதியான இன்று மட்டும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வருகை தர திட்டமிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.