கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்…எப்படி சமாளிக்க போகிறது திமுக !
DMK Alliance Parties Ask More Seats: திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், இது திமுக கூட்டணிக்கை தலை வலியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொகுதி பங்கீடு விவகாரத்தில் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Dmk Allaince Parties
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வரும் தேர்தல் பணிகளை பார்க்கும் போது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கி விட்டதாகவே கூறலாம். அந்த அளவுக்கு அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழு அமைப்பு என்பன உள்ளிட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறாக தேர்தல் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதே நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சும் அண்மைக் காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இதில், தொகுதி பங்கீடு தொடர்பாக அதிகமாக பேசப்படும் கட்சிகளில் முதலிடத்தில் திமுகவே உள்ளது. ஏனென்றால், 6 மாதங்களுக்கு முன்பே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சொந்த சின்னத்தில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும். அதற்கான தொகுதிகளை திமுக தலைமை நிச்சயம் அளிக்கும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் முதல் அணு குண்டை வீசினார்.
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்
இதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளன. இதில், காங்கிரஸ் கட்சி ஒரு படி மேலே சென்று முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் சுமார் 40 தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் படிக்க: தவெக குறித்த கேள்வி…விமர்சிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தார்மீக உரிமை
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அண்மையில் அளித்த பேட்டியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 100 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளதால் திமுக தலைமையிடம் 30 முதல் 40 தொகுதிகள் வரை கேட்பதற்கு தார்மீக உரிமை உள்ளது எனவும், எத்தனை தொகுதிகள் கேட்டாலும் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜனநாயக விரோதமாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.
திமுக தலைமைக்கு மிகப்பெரிய நெருக்கடி
இவ்வாறாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு வருவது திமுக தலைமைக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் அளிக்கும் பட்சத்தில், திமுகவும் குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட்டாக வேண்டும். அதே நேரத்தில், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கூறி வருகின்றன.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு
இவை இரண்டும் திமுக தலைமைக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால், தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதனால், சில கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி மாற்று கட்சிகளுக்கோ அல்லது தனித்து போட்டியிடும் நிலைக்கோ செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த நடைமுறை சிக்கல்களை திமுக எப்படி சமாளிக்க போகிறது என்ற கேள்வி எழுகிறது…
மேலும் படிக்க: திமுகவும்-அதிமுகவும் பங்காளிகள்…தவெக நிர்மல் குமார் அட்டாக்!