20 நாட்களாக உணவின்றி கைவிடப்பட்ட நாய்கள்… பரிதாபமாக மரணம்… திருநெல்வேலி அருகே சோகம்

Nellai Animal Tragedy : திருநெல்வேலி அருகே ஒரு வீட்டில் 20 நாட்களுக்கும் மேலாக உணவு, தண்ணீரின்றி 50க்கும் மேற்பட்ட நாய்கள் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் 4 நாய்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

20 நாட்களாக உணவின்றி கைவிடப்பட்ட நாய்கள்... பரிதாபமாக மரணம்... திருநெல்வேலி அருகே சோகம்

மாதிரி புகைப்படம்

Published: 

01 Jan 2026 18:25 PM

 IST

திருநெல்வேலி, ஜனவரி 1 : திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டத்தில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் வளர்ப்பு நாய்கள் (Dog) பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20 நாட்களாக ஒரு வீட்டிற்குள் பூட்டப்பட்ட நிலையில் பராமரிப்பு இன்றி தவித்த நாய்களில் நான்கு நாய்கள் உயிரிழந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவர் தனது வீட்டில் 50க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 20 நாட்களுக்கு முன்பு, நிலத் தகராறு தொடர்பான வழக்கில் தச்சநல்லூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவர் சிறைக்கு செல்லும் முன், தனது வீட்டில் இருந்த நாய்களின் பராமரிப்பு குறித்து யாரிடமும் உரிய தகவல் அளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

20 நாட்களாக உணவு தண்ணீரின்றி தவித்த நாய்கள்

ஆரம்பத்தில் அருகில் வசிக்கும் சிலர் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டும் நாய்களுக்கு உணவு அளித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், வீட்டிற்குள் பூட்டப்பட்டிருந்த நாய்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைக்காமல் நீண்ட நாட்கள் தவித்து வந்துள்ளன. இதன் விளைவாக, நான்கு நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. மேலும், மிகுந்த பசியின் காரணமாக, உயிரிழந்த நாய்களின் உடல்களை மற்ற நாய்கள் கடித்து உண்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : இன்ஸ்டாகிராம் காதலி கொடூரக் கொலை.. கணவனுக்கு தாலியை அனுப்பி வைத்த இளைஞர்!!

வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அடுத்து, அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து விலங்கு நல ஆர்வலர்களுக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், உணவு மற்றும் தண்ணீர் இன்றி வாடிய நிலையில் இருந்த நாய்களையும், உயிரிழந்த நாய்களின் உடல்களையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, போலீசாரின் உதவியுடன் வீட்டின் கதவு திறக்கப்பட்டு, உயிருடன் இருந்த நாய்களுக்கு உடனடியாக உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டது. உயிரிழந்த நாய்களின் உடல்கள் அகற்றப்பட்டன. பின்னர், தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தின் உதவியுடன், வீட்டிற்குள் இருந்த அனைத்து நாய்களும் மீட்கப்பட்டு, ஊட்டியில் உள்ள நாய் காப்பகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.

இதையும் படிக்க : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல்…தமிழக எல்லையில் பலத்த கண்காணிப்பு…வாகனங்களுக்கு தடை!

இந்த சம்பவம், வளர்ப்பு விலங்குகளை பொறுப்புடன் பராமரிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. விலங்குகளை வளர்ப்பவர்கள், எந்த சூழ்நிலையிலும் அவற்றின் உணவு, தண்ணீர் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை உடையவர்கள் என்றும், இவ்வாறு அலட்சியம் காட்டுவது கடுமையான குற்றமாகும் என்றும் விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டு பதிவான மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்று.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..
வங்கி சேவைகள் முதல் சிம் கார்டு வரை... புத்தாண்டில் வரவிருக்கும் மாற்றங்கள்
புத்தாண்டை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. கட்டுப்பாடுகள் என்ன?
நாடு முழுவதும் அறிமுகமாகும் பாரத் டாக்ஸி.. இதன் சிறப்பம்சம் என்ன?