தமிழகத்தில் முதல்முறையாக.. கேஸ் சிலிண்டர் பதுக்கியவர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..
Goondas Act for hoarding LPG gas cylinders: அங்கிருந்த மானிய விலை சிலிண்டர்கள் 63 மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் 126 என மொத்தம் 189 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த 2 சம்பவங்களிலும் மொத்தம் 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாதிரிப் புகைப்படம்
மதுரை, மார்ச் 13: மதுரையில் கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் வணிக சிலிண்டர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால், வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதேசமயம், ஒரு சிலர் வணிக, வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்களை பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போலீசாருக்கு தெரியவந்தது. அந்தவகையில், மதுரை கோவலன்புதூர் பகுதியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா உத்தரவின்பேரில் உதவி துணை காவல் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: வணிக சிலிண்டர் தட்டுப்பாடு.. சென்னையில் ஹோட்டல் உணவுகளின் விலை திடீர் உயர்வு.. மக்கள் அவதி..
கேஸ் சிலிண்டர்கள் பதுக்கல்:
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பழனி (46) என்பவரின் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில், போலீசார் சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கேஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மானிய விலை சிலிண்டர்கள் 100 மற்றும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் 109 என மொத்தம் 209 சிலிண்டர்களை போலீசார் கைப்பற்றினர். அதேபோல், கோவில் பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் (27) என்பவரது வீட்டின் அருகே சோதனை செய்தபோது, அங்கும் கேஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
398 சிலிண்டர்கள் பறிமுதல்:
அதன்பின்னர், அங்கிருந்த மானிய விலை சிலிண்டர்கள் 63 மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் 126 என மொத்தம் 189 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த 2 சம்பவங்களிலும் மொத்தம் 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து பழனி, மதன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது:
இந்தநிலையில், தற்போதைய சூழலில் கேஸ் சிலிண்டர்களுக்கான தடையற்ற விநியோகத்தை கருத்தில் கொண்டு, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் டிஜிபி பாஸ்கரதேவி, ஐ.ஜி. பிரபாகரன் ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர். அவர்களின் அறிவுரைப்படி, பழனி மற்றும் மதன்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கண்காணிப்பாளர் சினேகா பிரியா, மதுரை ஆட்சியருக்கு பிரவீன்குமாருக்கு பரிந்துரைத்தார்.
இதையும் படிக்க: டீ-காபி பிரியர்களுக்கு பேரதிர்ச்சி… நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலை உயர்வு!
இதனைத் தொடர்ந்து இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பழனி மற்றும் மதன்குமார் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கேஸ் சிலிண்டர் பதுக்கல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது தமிழகத்தில் இதுவே முதன்முறை என போலீசார் தெரிவித்தனர்.