நெருங்கும் தேர்தல்.. சூடுபிடிக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள்.. தீர்வு என்ன?
2026 Tamilnadu assembly elections: இத்தனை ஆண்டுகளாக அதிமுக, திமுக என்று மட்டுமே இருந்த தமிழக தேர்தல் களம் இம்முறை, விஜய் வருகையால் 4 முனைத் தேர்தலாக பிரிந்துள்ளது. இந்த தேர்தல் பல்வேறு வகையிலும் தமிழக மக்களுக்கு புதுமையான தேர்தலாகவே இருக்கிறது.

நர்சுகள் போராட்டம்
தேர்தல் நெருங்கும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நர்சுகள் உள்ளிட்ட அரசு துறைகளின் பல்வேறு பிரிவினர் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். தேர்தல் காலத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையுடன் சங்கங்கள் தங்களின் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இன்னும் ஓரிரு மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் கிளம்பியுள்ளன. அதேசமயம், அரசியல் ரீதியாகவும் தவெக என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய், திமுகவே தனது அரசியல் எதிரி என ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் இளைஞர்களை கூட்டி, உரக்க குரல் எழுப்பி வருகிறார்.
இதையும் படிக்க : கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்க தவெக திட்டம்… விஜய்யுடன் செங்கோட்டையன் ஆலோசனை!!
பல முனைகளில் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு:
இதன் மூலம், இத்தனை ஆண்டுகளாக அதிமுக, திமுக என்று மட்டுமே இருந்த தமிழக தேர்தல் களம் இம்முறை, 4 முனையாக பிரிந்துள்ளது. இந்த தேர்தல் பல்வேறு வகையிலும் தமிழக மக்களுக்கு புதுமையான தேர்தலாகவே இருக்கிறது. அந்த வகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ, போட்டா ஜியோ போன்ற அமைப்புகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. அதேபோல, சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும் இந்த மாத இறுதியிலிருந்து தொடர் வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
நர்சுகள், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்:
இவை மட்டும் இல்லாமல், பணிநிலைத்தன்மை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நர்சுகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களது போராட்டமும் வலுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக அரசு துறைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
நாளை அரசு ஊழியர்களும் போராட்டம்:
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுடன் நாளை (திங்கள்கிழமை) அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதில் சமரசம் எட்டப்படுமா அல்லது போராட்டங்கள் மேலும் தீவிரமடையுமா என்பது தெரியவரும். அதேசமயம், நர்சுகளுடனான பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையும் படிக்க : அதிமுக இடத்தை குறி வைக்கும் தவெக…விஜய்யின் திட்டம் பலிக்குமா?பொய்க்குமா?
அழுத்தம் கொடுக்கும் அரசியல் கட்சிகள்:
இப்படி அரசு ஊழியர்கள் தரப்பில் ஒருபுறும் நெருக்கடி வலுக்க, மறுபுறும், அரசு நிறைவேற்றுவதாக கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மொத்த சூழ்நிலையை அரசு எப்படிக் கையாளப் போகிறது என்பது காத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது.