Indian Cricket Team in 2026: டி20 உலகக் கோப்பை முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை.. இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை!
Indian Cricket Team Schedule 2026: ஐபிஎல் 2026 சீசனுக்கு பிறகு, இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும். பின்னர், இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. அங்கு, இரு அணிகளும் 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் விளையாடப்பட இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) கிட்டத்தட்ட 2025ம் ஆண்டின் சர்வதேச போட்டிகளை முடித்து 2026ம் ஆண்டு தொடக்கத்திற்காக காத்திருக்கிறது. கடந்த 2025ம் ஆண்டின் தொடக்கத்தின்போது இந்திய அணி ஆஸ்திரேலிய அணி சுற்றுபயணத்திற்கு மேற்கொண்டது. தற்போது, இந்திய அணி 2026ம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளுடன் தொடங்குகிறது. இந்த தொடருக்கு பிறகு, 2026ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய நிகழ்வு டி20 உலகக் கோப்பை போட்டிகள் (2026 T20 World Cup) நடைபெறவுள்ளது. 2026ம் ஆண்டு உலகக் கோப்பை மட்டுமின்றி, இந்திய அணிக்கு இன்னும் பல போட்டிகள் உள்ளன. அதன்படி, 2026ம் ஆண்டில் இந்திய அணியின் அட்டவணையை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இந்தியா முதல் இலங்கை வரை.. 2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் விவரம்!
நியூசிலாந்து தொடர்:
இந்திய கிரிக்கெட் அணி 2026 ஆம் ஆண்டு தனது பயணத்தை நியூசிலாந்துக்கு எதிரான தொடருடன் தொடங்கும். இந்திய கிரிக்கெட் அணி 2026ம் ஆண்டை சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருடன் தொடங்கும். இந்தத் தொடரானது 2026 ஜனவரி 11 முதல் 2026 ஜனவரி 31 வரை நடைபெறும். டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி இருதரப்பு தொடர் இதுவாகும்.
அதன் பிறகு, டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும். இந்த முக்கிய போட்டியானது வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7 முதல் 2026ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி வரை நடைபெறும். சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி 2026 உலகக் கோப்பை போட்டியில் களமிறங்குகிறது.
ஐபிஎல்லுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் தொடர்:
ஐபிஎல் 2026 சீசனுக்கு பிறகு, இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும். பின்னர், இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. அங்கு, இரு அணிகளும் 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் விளையாடப்பட இருக்கிறது.
இதனை தொடர்ந்து, இந்திய அணி 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இங்கு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன் பிறகு, இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். இருப்பினும், தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்:
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற 2026ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும். கடந்த முறை நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வழக்கமாக, இந்தப் போட்டிக்கு பிசிசிஐ அணி தனது இரண்டாம் நிலை இந்திய அணியை அனுப்பும்.
ALSO READ: 2025ல் கிரிக்கெட்டில் கலக்கிய தருணங்கள்.. படைக்கப்பட்ட முக்கிய சாதனைகள்..!
தொடர்ந்து, இந்திய அணி வருகின்ற 2026ம் ஆண்டு அக்டோபர் கடைசி வாரத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இங்கு சுப்மன் கில் தலைமையிலான அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது. இந்த 2026ம் வருடத்தின் கடைசி தொடரை சொந்த மண்ணில் விளையாடும் இந்தியா. இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாடும்.