Rishabh Pant Backflip: பேக் ஃப்ளிப் அடிப்பது தேவையற்றது.. ரிஷப் பண்ட்க்கு ஆபரேஷன் செய்த மருத்துவர் கருத்து!

Rishabh Pant's Miraculous Recovery: ரிஷப் பண்டின் அதிர்ச்சி விபத்து மற்றும் அவரது அசாதாரண மீட்சி பற்றி டாக்டர் டின்ஷா பர்திவாலா விளக்கியுள்ளார். விபத்தின் தீவிரம், பண்ட் கேட்ட முதல் கேள்வி, அவரது மீட்புக்கான பயணம் மற்றும் பேக் ஃப்ளிப் கொண்டாட்டம் குறித்த கவலைகள் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. பண்டின் தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு அவரது வெற்றிக்கு காரணம் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

Rishabh Pant Backflip: பேக் ஃப்ளிப் அடிப்பது தேவையற்றது.. ரிஷப் பண்ட்க்கு ஆபரேஷன் செய்த மருத்துவர் கருத்து!

ரிஷப் பண்ட் - டாக்டர் டின்ஷா பர்திவாலா

Published: 

30 Jun 2025 09:43 AM

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) ஒரு சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனால், உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தால் ரிஷப் பண்டின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக பலரும் கூறிவந்தனர். ஆனால், படுகாயம் அடைந்த பண்ட், தனது தன்னம்பிக்கை மற்றும் தீராத உடற்பயிற்சியால் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியது மட்டுமல்லாமல், தனது அற்புதமான ஆட்டத்தால் பல்வேறு சாதனைகளை குவித்து வருகிறார். தொடர்ந்து, காயத்தில் இருந்து மீண்டு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு சுமார் 21 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட்டிற்கு திரும்பினார். தற்போது, ரிஷப் பண்ட் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்காக (India vs England Test Series) பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தநிலையில், ரிஷப் பண்ட்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பர்திவாலா, பண்ட் கிரிக்கெட் திரும்பியது குறித்து பேசியுள்ளார்.

என்ன சொன்னார் டின்ஷா பர்திவாலா..?

டெய்லி டெலிகிராப்பிடம் பேட்டி அளித்த டாக்டர் டின்ஷா பர்திவாலா, “ரிஷப் பண்ட் மிகவும் அதிர்ஷ்டசாலி உயிர் பிழைத்தார். பண்ட் உண்மையிலேயே பிழைத்தது அதிர்ஷ்டவசமானது. மருத்துவமனைக்கு ரிஷப் பண்ட் கொண்டு வரப்பட்டபோது, அவரது வலது முழங்கால் முற்றிலும் உடைந்திருந்தது. வலது கணக்காலிலும் காயம் இருந்தது, உடலில் இன்னும் பல சிறிய காயங்கள் இருந்தன. காரில் இருந்து உடைந்த கண்ணாடி காரணமாக அவரது முதுகில் நிறைய காயங்கள் ஏற்பட்டிருந்தது” என்றார்.

ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி இதுதான்:

மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு ரிஷப் பண்ட் அழைத்து வரப்பட்டது குறித்து டாக்டர் பர்திவாலா பேசுகையில், “ரிஷப் பண்ட் எங்கள் மருத்துவமனைக்கு முதலில் வந்தபோது என்னிடம் கேட்ட முதல் கேள்வி, என்னால் மறுபடியும் கிரிக்கெட் விளையாட முடியுமா..? என்பதுதான். அதேநேரத்தில், பண்டின் தாயாரும் பண்ட் மீண்டும் நடக்க முடியுமா என்று எங்களிடம் கேட்டார்..? விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட்டால் தனது கைகளை கூட அசைக்க முடியவில்லை. 2 கைகளும் முழுமையாக வீங்கி இருந்தன. உண்மையை சொல்லவேண்டுமென்றால் ரிஷப் பண்டால் சுயமாக பல் துலக்க முடியவில்லை. பண்ட் நடக்கத் தொடங்கியதும், பின்னர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்றார், அதன் பிறகு அவர் கிரிக்கெட்டில் மீண்டும் வெற்றி பெற்றார்.” என்றார்.

தொடர்ந்து பேக் ஃப்ளிப் பண்ட் அடிப்பது குறித்து பேசிய டாக்டர் பர்திவாலா, “பண்ட் ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றுள்ளார். அதில், நிபுணத்துவம் பெற்றவராக தெரிகிறது. இதனால்தான், பண்ட் சமீப காலங்களில் சதம் அடித்தபிறகு பேக்ஃபிளிப் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், அவரது கொண்டாட்டம் சரியானதாக தோன்றினாலும், இது தேவையற்றது” என்று தெரிவித்தார்.