மெஸ்ஸியின் 3 நாள் இந்திய சுற்றுப் பயணம்: பிரபலங்களுடன் கால்பந்து போட்டி.. முழு விவரம்!!
Lionel Messi's GOAT India tour 2025: ஐதராபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மெஸ்ஸியை சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரூ.10 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு, பலக்னுமா அரண்மனையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வரவுள்ளார். ‘கோட் இந்தியா டூர்’ என அழைக்கப்படும் இந்த சுற்றுப்பயணம் நாளை (டிசம்பர் 13) தொடங்கி டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, புது டெல்லி என நான்கு முக்கிய நகரங்களுக்கு மெஸ்ஸி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் அவருடன், அவரது அணி வீரர்கள் லூயிஸ் சுவாரஸ்ஸையும், ரோட்ரிகோ டி பாலும் வருகை தர உள்ளனர். லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக உலக கோப்பையை வென்ற அர்ஜென்டீனா கால்பந்து அணியின் வீரர் மெஸ்ஸி மற்றும் அவரது அணி வீரர்கள் இந்தியா வருகை தருகின்றனர்.
ALSO READ: பேட்டிங்கில் பதறிய இந்தியா.. பழிவாங்கிய மார்க்ரம் படை.. SA 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா செல்லும் மெஸ்ஸி:
அந்தவகையில், இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு கொல்கத்தா வரும் மெஸ்ஸிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து நாளை காலை 10.30 மணிக்கு அவருடைய சிலை திறப்பு விழா நடக்கிறது. தொடர்ந்து, 11.25 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள யுவ பாரதி மைதானத்துக்கு செல்கிறார். அங்கு, அவரை முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ஷாரூக் கான், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஆகியோர் வரவேற்கின்றனர். பின்னர், அங்கு நட்பு ரீதியாக நடக்கும் கால்பந்து போட்டியில் பங்கேற்கிறார்.
ஐதராபாத் செல்லும் மெஸ்ஸி:
தொடர்ந்து, பிற்பகல் 2 மணியளவில் ஐதராபாத் செல்லும் மெஸ்ஸி, அங்குள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நட்பு ரீதியலான கால்பந்து போட்டியில் விளையாடுகிறார். இந்த போட்டியை காண்பதற்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று அவர், போட்டியை காண நேரில் செல்ல உள்ளார். இதில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மெஸ்ஸியுடன் விளையாடுகிறார். இதற்காக கடந்த சில நாட்களாக ரேவந்த் ரெட்டி பயிற்சி எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், மெஸ்ஸியை கொண்டாடும் விதமாக இசை கச்சேரி நடக்கிறது.
புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சம்:
இந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸியை சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரூ.10 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை செல்லும் மெஸ்ஸி:
தொடர்ந்து, டிசம்பர் 14ம் தேதி மும்பை செல்லும் மெஸ்ஸி, பிற்பகல் 3.30 மணியளவில் இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் படேல் கோப்பை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து, பிரபலங்களுடன் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அவர், மாலை 5 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கும் பேஷன் ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
ALSO READ: குறையும் ரோஹித் – விராட்டின் சம்பளம்..? கில்லுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிசிசிஐ முக்கிய முடிவு!
டெல்லி செல்லும் மெஸ்ஸி:
பின்னர் டிசம்பர் 15ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். பின்னர், அருண் ஜெட்லி மைதானத்தில் மினெர்வா அகாடமி வீரர்களைப் பாராட்டுதல் உட்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனிடையே, மெஸ்ஸி பங்கேற்கும் கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகள் District செயலியில் விற்பனை செய்யப்படுகிறது.